44 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்கும் ஒப்பந்தத்தைக் கைவிட்டார் எலான் மஸ்க். இதனை அடுத்து அவர் மீது வழக்கு தொடரப் போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களை நடத்திவரும் எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப் போவதாக அறிவித்திருந்தார். சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரின் முழு பங்கை எலான் மஸ்க் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் தனது ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக எலான் மஸ்க் அண்மையில் தெரிவித்திருந்தார். போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அளிக்கத் தவறினால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவைக் கைவிடுவேன் என எலான் மஸ்க் முன்னரே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்போது ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவைக் கைவிட்டுள்ளார் எலான் மாஸ்க். ட்விட்டர் நிறுவனம் சரியான பதிலை அளிக்காததால் தனது 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக அவர் அறிவித்துள்ளார். டெக் உலகில் மிகப்பெரிய பிசினஸ் ஒப்பந்தமாகப் பார்க்கப்பட்ட, பேசப்பட்ட இதைக் கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எலான் மஸ்க் இந்த முடிவை எடுத்த நிலையில் ட்விட்டரின் தலைவர் பிரெட் டெய்லர் மஸ்கிற்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். “டெலாவேர் கோர்ட் ஆஃப் சான்சரிக்கு (Delaware Court of Chancery) இந்த வழக்கைக் கொண்டு சென்று, அங்கே நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்” என அவர் தெரிவித்திருக்கிறார்.