புதுடெல்லி: சமீப காலமாக அடிக்கடி விபத்துகள் நடந்தை தொடர்ந்து, நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தக் கூடிய ரோப்கார்கள், கேபிள் கார்களின் பாதுகாப்பு குறித்து தேசிய பேரிடர் படையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பைத்யநாத் கோயிலுக்கு செல்வதற்காக சுற்றுலா பயணிகள் ரோப்கார்களில் ஏறினர். அப்போது, இரு ரோப்கார் கேபின்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 3 பேர் பலியாயினர். அதே போல், இமாச்சல பிரதேசம் சோலன், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சத்னா ஆகிய இடங்களில் கேபிள் கார்கள் திடீரென நடுவழியில் நின்றன. கேபிள் கார்களில் சிக்கி தவித்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எப்) வீரர்கள் மீட்டனர். இந்த ஆண்டில் 3 விபத்துகள் நிகழ்ந்துள்ளதால் நாடு முழுவதும் உள்ள ரோப் கார், கேபிள் கார் சேவைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை ஆய்வு நடத்தி வருகிறது. இந்த சோதனைகளால் ரோப் கார், கேபிள் கார்களை இயக்குபவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், இனி விபத்துகள் நிகழ்ந்தால் செயல் திட்டம் வகுப்பதற்கும் வசதியாக இருக்கும் என்று என்டிஆர்எப்பின் இயக்குனர் ஜெனரல் தெரிவித்தார்.