வாகனங்களுக்கான பெட்ரோல் தேவையை, பசுமை எரிபொருட்கள் இன்னும் 5 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வரும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், அகோலா பகுதியில் உள்ள பஞ்சப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யாபீடம் சார்பில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு மதிப்புறு முனைவா் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
மாற்று எரிசக்தியை நோக்கி நாடு பயணித்து வரும் சூழலில் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்க வாய்ப்புகள் இல்லை. விதர்பா பகுதியில் பயன்படுத்தப்படும் பயோ எத்தனால் மூலம் வாகனத்திற்கான எரிவாயுவை தயாரிக்கலாம். மேலும், ஆழ் கிணறு நீர் மூலம் பசுமை ஹைட்ரஜன் தயாரித்து ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்க முடியும். இத்தனை நாள் உணவு தயாரித்து வழங்கி வந்த விவசாயிகள் இனி எரிசக்தியையும் தயாரித்து வழங்கும் காலம் உருவாகி உள்ளது.
நாட்டில் மாற்று எரிசக்திகளின் பயன்பாட்டில் முன்னுதாரணமாக மகாராஷ்டிரா விளங்க வாய்ப்பு உள்ளது. எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ சிஎன்ஜி, கிரீன் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 115 ரூபாய் ஆக உள்ள நிலையில், ஒரு லிட்டர் எத்தனாலின் விலை 64 ரூபாய் இருப்பதன் மூலம் பொது மக்களுக்கு எத்தனால் மிக மலிவான எரிசக்தியாக அமையும்.
அடுத்தாண்டு ஏப்ரல் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் 20 சதவீதம் எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் நாட்டின் எரிசக்தி தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி சுமை குறையும்.
வாகனங்கள் அனைத்தும் பசுமை ஹைட்ரஜன், எத்தனால் கலப்பு எரிபொருள், இயற்கை எரிவாயு போன்றவற்றில் இயங்கும். நமது விவசாயிகள் திறமையானவர்கள். அவர்களுக்கு புதிய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுப்பது அவசியம்.
இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.