புதுடெல்லி: லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாடு கோட்டுக்கு மிக அருகில் பறந்து வந்து அச்சுறுத்திய சீன போர் விமானத்தை சுட்டு வீழ்த்த இந்திய விமானப்படை தயாரானது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.கிழக்கு லடாக் பகுதிகளில் இந்திய எல்லை பகுதிகளை ஆக்கிரமிக்க சீன ராணுவம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ல் நடந்த இதுபோன்ற முயற்சியை தடுத்த, இந்திய வீரர்கள் மீது சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. பின்னர், இருநாட்டு அரசுகளும் தூதரக ரீதியாகவும், ராணுவ மட்டத்திலும் நடத்தி வரும் பேச்சுவார்த்தையின் காரணமாக, இந்த மோதல் தவிர்க்கப்பட்டு வருகிறது.இருப்பினும், லடாக் எல்லை முழுவதும் சீன ராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய வீரர்களும் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.அதே நேரம், இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையில் லடாக்கில் ஏற்கனவே ஆக்கிரமித்த ஹோடன், கர் குன்சா ஆகிய இடங்களில் சீன ராணுவம் மிகப்பெரிய விமானப்படை தளங்களை அமைத்துள்ளது. இங்கு போர் விமானங்களும், ஆளில்லா போர் விமானங்களும் குவிக்கப்பட்டு உள்ளன. மேலும், இந்திய ஏவுகணைகள், விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பையும் சீனா அங்கு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு போட்டியாக, இந்தியாவும் எல்லையில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் வகையில் விமானப்படையை தயார்நிலையில் வைத்திருக்கிறது.இந்நிலையில், கடந்த மாதம் இறுதி வாரத்தில் ஒரு நாள், அதிகாலை 4 மணியளவில் லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு மிக அருகில் சீன போர் விமானம் பறந்து வந்து அச்சுறுத்தல் ஏற்படுத்திய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள் அந்த விமானத்தை கண்டதும், அப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ரேடார்கள் மூலம் அதை கண்காணித்தனர். மேலும், விமானப்படையின் ரேடாரிலும் சீன போர் விமானம் சிக்கியது. இதுபோன்ற தருணங்களில், இந்திய எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழையும் பட்சத்தில் முதலில் எச்சரிக்கை கொடுக்கவும், பிறகு தாக்குதல் நடத்தவும் இந்திய விமானப்படைக்கு நிரந்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில், முதலில் அந்த விமானத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், தாக்குதலுக்கு தேவையான முன்னேற்பாடுகளில் விமானப்படை ஈடுபட்டது. இதன் காரணமாக, அந்த அதிகாலையில் பெரும் பரபரப்பு நிலவி இருக்கிறது. பின்னர், சீன போர் விமானம் அப்பகுதியில் இருந்து திரும்பிச் சென்றது.அந்த விமானம் எல்லைக்கு அருகில் வந்து அத்துமீறிய சம்பவத்துக்கு சீன அரசிடம் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.