திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பத்மகிரி பாபா ஆசிரமத்தின் தலைமை பொறுப்பாளர் சரவணகுமார், தனது கனவில் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் பல விஷயங்களை பேசியதாக சொல்லி இருக்கிறார்.
இதுகுறித்த அவரின் பேட்டியில், “அதிமுகவின் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு சில விஷயங்களை என்னிடம் தெரிவித்துள்ளார். நான் இன்று இந்த தகவலை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
எம்ஜிஆர் என்னிடம் சொன்னது என்னவென்றால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைத் தொண்டனுடைய ரத்த நாளத்தினால் கோர்க்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அமைப்பு.
இந்த அமைப்புக்காக இத்தனை பேர் சண்டை செய்து கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் நீங்கள் சமரசமாக செல்ல வேண்டும். நான் கடுமையான கோபத்தில் இருப்பதாகவும் எம்ஜிஆர் என்னிடம் தெரிவித்தார்.
மேலும் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களும் என்னிடம் பேசினார், அவர் என்ன சொல்கிறார் என்றால், நான் இறப்பதற்கு முன்பாக இந்த ஆட்சி பொறுப்பையும், கட்சி பொறுப்பையும் நான் ஓ பன்னீர்செல்வத்திடம் தான் ஒப்படைத்தேன். அவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்படைத்தேன்.
ஆனால், நான் அனைத்தையுமே ஓ பன்னீர்செல்வத்திடம் தான் ஒப்படைத்தேன். மறுபடியும் அவர் அதை என்னிடம் ஒப்படைக்கட்டும். பொதுச்செயலாளர் என்பது நான் தான். அதன் பிறகு நான் ஒரு முடிவுக்கு வருகிறேன். அதற்கு இடையில் நீங்கள் எதுவும் சண்டை செய்து கொள்ளக் கூடாது என்று அவர் சொல்ல சொன்னார்.
இந்த சண்டை இப்படியே நீடித்தால், ஓ பன்னீர்செல்வமாக இருந்தாலும், அது எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி, இரண்டு பேரில் யாரேனும் யாரேனும் ஒருவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பதனையும் ஜெயலலிதா என்னிடம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொது செயலாளர் என்ற ஒரு மூன்று பெயர்களை குறிப்பிட்டு எழுதி, அதனை ஜெயலலிதா அவர்கள் எம்ஜிஆரிடம் கொடுத்துள்ளார். அதில் முதல் பெயராக கலைத்துரை இருந்துள்ளது. இரண்டாவது பெயராக சசி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது பெயராக விவேக் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நான் உண்மையாகவே சொல்கிறேன். இவர்கள் யாரையும் நான் நேரில் பார்த்ததில்லை. என் கனவில் தோன்றி அவர்கள் சொன்னதை தான் உங்களிடம் தெரிவிக்கிறேன்” ” என்று சரவணகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அவர் சொல்லியதில் விவேக் என்பவர் யார் என்று தெரியவில்லை. அது குறித்து அதிமுக தொண்டர்களிடையே குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.