திருத்தணி சட்டமன்ற தொகுதியில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
அதன்படி, காலை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்புமணி இராமதாஸ் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மேட்டுத்தெரு பகுதியில் உள்ள எல்லை போராட்ட தியாகி தளபதி.கே.வினாயகம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பள்ளிப்பட்டு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பாமகவின் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவிக்கையில்,
“தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய இருக்கிறேன். திமுக, அதிமுக என மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்தும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை.
பள்ளிப்பட்டு பகுதியில் ஜவுளி பூங்கா அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும. இந்த பகுதியின் முக்கிய தொழிலாக நெசவுத்தொழில் உள்ளது. தற்போது அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சினையை அவர்களுக்குள் பேசி தீர்த்து கொள்ள வேண்டும்” என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.