சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பு இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது. இதனிடையே, வானகரத்தில் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதில், பொதுச்செயலாளர் நியமனம் உள்ளிட்ட 16 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சையால் முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால், ஓபிஎஸ்தனது ஆதரவாளர்களுடன் பொதுக்குழுவில் இருந்து பாதியில் வெளியேறினார். பின்னர், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அவர், ஜூலை 11-ம்தேதி மீண்டும் பொதுக்குழு கூடி, ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கும் என அறிவித்தார்.
இந்நிலையில், பொதுக்குழுவுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, 11-ம் தேதி காலை 9 மணிக்கு தீ்ர்ப்பு அளிப்பதாக அறிவித்தார். அதன்படி, இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ளது.
இருப்பினும், தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற எண்ணத்தில், வானகரம் வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில், பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பழனிசாமி தரப்பினர் செய்துள்ளனர்.
மண்டபத்தின் உள்ளே ஒரு பாகத்தில்செயற்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே அரங்குக்குள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்காக மண்டபத்துக்கு வெளியே பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. செங்கோட்டை வடிவில் நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு அரங்குக்குள் உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக அரங்கின் வெளியே, பதிவு செய்யும் இடத்துக்கு முன்னதாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ளதுபோல ஸ்கேனர் வசதியுடன் எலெக்ட்ரானிக் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தால் அளிக்கப்பட்டுள்ள கியூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே இதன் கதவுகள் திறக்கும்.
முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் நேற்று மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். “காலை 7 மணி முதலே பொதுக்குழு உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர்” என பெஞ்சமின் தெரிவித்தார்.
பொதுக்குழு இன்று காலை 9.15 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பழனிசாமி ஆதரவாளர்கள் அனைவரும் நேற்றிரவே சென்னை வந்துவிட்டனர். அவர்கள் மதுரவாயல், பூந்தமல்லி, வானகரம், அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் நியமனம் உள்ளிட்ட 16 தீர்மானங்களை நிறைவேற்ற பழனிசாமி தரப்பினர் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் ஆதரவு பொதுக்குழு நிர்வாகிகளும் நேற்றே சென்னை வந்துள்ளனர். அவர்களும் குறிப்பிட்ட பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொதுக்குழு கூட்டம்மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக பழனிசாமி தனது ஆதரவு நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்தால்பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை இரவு வரை தொடர்ந்தது.
அதேபோல, ஓபிஎஸ்ஸும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும், மேல்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு காரணமாக கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வாகன ஓட்டிகள், பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரையிலான சாலையில் இன்று காலை 6 முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வண்ணம், தங்களது பயணங்களை முன்னேற்பாடாக மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.