ஆக்ராவில் கடந்த 2 ஆண்டுகளில் 406 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் கடந்த 2 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டவர்கள் பற்றிய விவரங்களை அம்மாநில காவல்துறை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. அதன்படி ஆக்ராவில் கடந்த 2020ம் ஆண்டில் 174 பேரும், 2021-22ம் ஆண்டில் 143 ஆண்கள் மற்றும் 89 பெண்கள் உட்பட 232 பேரும் என கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 406 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் சமூக பாதுகாப்பற்ற நிலையில் பலர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான், வேலையின்மை, கடன் தொல்லை, குடும்பப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலைகள் நிகழ்கின்றன என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மூத்த மனநல மருத்துவர் ஒருவர் கூறுகையில், ”90 சதவீத தற்கொலைகளுக்கு மன அழுத்தமே முக்கிய காரணமாக அமைகிறது. தற்கொலை எண்ணம் இருப்பவர்கள் தற்கொலை எச்சரிக்கை குறிப்புகளை யாரேனும் ஒருவரிடமாவது பகிர்வார்கள். அல்லது தங்களுடைய தோற்றத்தைப் பற்றி சிறிதும் கவனம் கொள்ளாமல் இருப்பது, எதிலும் நாட்டமின்மை ஆகியவையும் தற்கொலைக்கான சமிக்ஞைகள். அப்படிப்பட்டவர்களிடம் விழிப்புடன் செயல்பட்டு உரிய கவுன்சிலிங் கொடுக்கும்போது அவர்களிடம் நம்பிக்கை பிறக்கும்” என்கிறார் அவர்.
இதையும் படிக்கலாமே: சொத்து தகராறு! தாயை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயன்ற மகன் கைது!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM