சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளில் செயல்படும் ஆருத்ரா கோல்டு நிறுவனம் நிதி மற்றும் தங்கம் சார்ந்த வணிகத்தை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனம் பெயரில் சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியானது. அதில், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.32 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரப் பணம் மீதான ஆசையைத் தூண்டி,மோசடி செய்யும் திட்டம் எனப் புகார் எழுந்தது.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு கைது செய்யப்பட்டனர். ஆருத்ரா நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள், 70 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தங்களின் தொகையை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இற்கான அலுவலராக சென்னை மாவட்ட ஆட்சியரக மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே முதலீடு செய்தவர்கள் அதற்கான ஆவணங்களுடன் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.