பர்மிங்காம்,
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பர்மிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். அணியின் எண்ணிக்கை 49 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 20 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 15, ஹர்திக் பாண்ட்யா 12, தினேஷ் கார்த்திக் 12, ஹர்ஷல் படேல் 13, புவனேஷ்வர் குமார் 2 ரன்னில் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரவீந்திர ஜடேஜா பொறுப்புடன் ஆடினார்.
இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 4 விக்கெட்டுகள், கிலீசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.
ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி முன்னணி வீரர்களை வெளியேற்றினர். அதிகபட்சமாக மொயீன் அலி 35 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய டேவிட் வில்லி 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில் இங்கிலாந்து அணி 17 வது ஓவர் முடிவில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.