இந்தியா உட்பட 5 நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டு உள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக போர் நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்த போர், 150வது நாளை நெருங்கி உள்ளது. இரு நாட்டு ராணுவ வீரர்கள், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், போர் முடிவுக்கு வரவில்லை.
உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றி உள்ள ரஷ்யா, தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. மேலும் உக்ரைனுக்கு ராணுவ ரீதியிலான உதவி கிடைக்க சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களிடம் அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி இருந்தார்.
ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு: போலீஸ் அதிகாரிக்கு மேலும் 20 ஆண்டுகள் சிறை
இந்நிலையில், ஜெர்மனி, இந்தியா, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை பணிநீக்கம் செய்து, அந்நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்தும், அவர்களுக்கு வேறு பணிகள் வழங்கப்படுமா என்பது குறித்தும் எந்த தகவலையும் உக்ரைன் அதிபர் மாளிகை வெளியிடவில்லை.
உக்ரைனுக்கான உதவிகளை பெற்றுத் தருவதில் சுணக்கம் காட்டியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரம், உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ராணுவ ரீதியிலான உதவிகளை வழங்கி வரும் ஜெர்மனி நாட்டிற்கான உக்ரைன் தூதரையும் அதிபர் ஜெலன்ஸ்கி நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.