அகோலா: வாகனங்களுக்கான பெட்ரோல் தேவையை, பசுமை எரிபொருட்கள் இன்னும் 5 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வரும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவின் அகோலா நகரில் உள்ள டாக்டர் பஞ்சப்ராவோ தேஷ்முக் கிரிஷி வித்யாபீடம், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசியதாவது:
நாட்டின் வேளாண் வளர்ச்சியை இன்னும் 5 ஆண்டுகளில் 12 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக வேளாண் விஞ்ஞானிகள் உயர்த்த வேண்டும். பசுமை எரிபொருட்களான எத்தனால், ஹைட்ரஜன் , எத்தனால் மற்றும் இதர பசுமை எரிபொருட்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
இன்னும் 5 ஆண்டுகளில் பெட்ரோலின் தேவை இருக்காது என நம்புகிறேன். வாகனங்கள் அனைத்தும் பசுமை ஹைட்ரஜன், எத்தனால் கலப்பு எரிபொருள், இயற்கை எரிவாயு போன்றவற்றில் இயங்கும். நமது விவசாயிகள் திறமையானவர்கள். அவர்களுக்கு புதிய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுப்பது அவசியம். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.