சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள் வருமாறு:
ஆளுநர் ஆர்.என்.ரவி: அமைதியான, வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு, நமது இளம் தலைமுறையினருக்கு நற்சிந்தனை, கருணை, பெருந்தன்மை ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நன்னாளில் உறுதி கொள்வோம். இந்த தியாகத் திருநாளானது நம் அனைவருக்கும் அன்பின் வலிமையையும், நல்லிணக்கத்தையும், உடல்நலன், மகிழ்ச்சியையும், நமது பெரும் முயற்சிகளில் வெற்றியையும் அளிக்கட்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத்தியாகப்பெருநாளை மகிழ்ச்சியுடனும், கரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து பாதுகாப்புடனும் கொண்டாடிட வேண்டும் எனக் கேட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி: இறைதூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனிதநேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம். எல்லோரிடத்திலும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே இறைதூதரின் தியாகங்களை எண்ணிப்பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத் தான்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழி வந்தவர்கள் என்ற நபிகள் நாயகம்கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அனைவரிடமும் அன்பு காட்டுங்கள், இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்ற பாடத்தைப் புரிந்து நடந்தாலே உலகில் அமைதியும், சகோதரத்துவமும் தழைக்கும். நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பக்ரீத் பண்டிகை திருநாளில் இரக்கம், சகோதரத்துவம், மதநல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு ஆகிய நற்பண்புகள் மக்கள் மத்தியில் மேலும் அதிகரிக்கும். பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி சகோதரத்துவத்துடன் மதித்து மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தமிழகத்தில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுப்பூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம்கள், சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுசேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிதலைவர் திருமாவளவன்: இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு எதிராக திட்டமிட்டு விதைக்கப்படும் வெறுப்பு அரசியலை வீழ்த்திடவும் ஜனநாயகம், சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்திடவும் உறுதியேற்போம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரும், நலமுடனும், எல்லா வளமுடனும், சம வாய்ப்பும், சம உரிமையும் பெற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தெலங்கானா ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வி.கே.சசிகலா, அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, சமக தலைவர் ஆர்.சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய தேசிய லீக் மாநில பொதுச் செயலாளர் ஜகிருத்தீன் அகமது, சு.திருநாவுக்கரசர் எம்பி உள்ளிட்டோரும் பக்ரீத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.