சென்னை: சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை கூட்டம் தொடங்குவதற்கு சற்று நேரம் முன்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவுள்ளது. இதற்கிடையில், இபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2,452 ஆக உயர்ந்துள்ளது. ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியிலேயே அவரது ஆதரவு உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இபிஎஸ் தரப்பு திட்டமிட்டபடி நாளை பொதுக்குழுவை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவில் உள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை ரத்து செய்வது, பழையபடி கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவது, அதுவரை தற்காலிக பொதுச் செயலாளரை நியமிப்பது, பொதுச் செயலாளர் தேர்தலை அறிவிக்கை செய்வது உள்ளிட்ட 16 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை வானகரத்தில் கடந்த 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவின்போது, இபிஎஸ்ஸுக்கு 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதன்பிறகு, ஓபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக இபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் இபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளிக்கும் பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களும் இபிஎஸ் ஆதரவாளர்களாக மாறி வருகின்றனர். அதன்படி, நேற்று வரை இபிஎஸ்ஸுக்கு 2,443 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தது.
இதற்கிடையே, தேனியில் இருந்து மாவட்ட பொருளாளர் சோலை ராஜா, மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, கம்பம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் இளையநம்பி உள்ளிட்ட 9 பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்று முன்னாள் எம்எல்ஏவான எஸ்டிகே ஜக்கையன் தலைமையில் சென்னை வந்து இபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதன்மூலம் இபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2,452 ஆக அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம், ஓபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. தேனி மாவட்டத்தில் மொத்தம் 62 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில், அதில் இதுவரை 42 பேர் இபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 20 பேர் மட்டுமே ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், திட்டமிட்டபடி சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் இபிஎஸ் தரப்பு செய்துள்ளது. ஏற்கெனவே 2,665 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கட்சி தலைமை மூலமாக அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ்ஸுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கூட்ட அரங்கம், உணவு அருந்துவதற்கான பந்தல், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அரங்க மேடையின் பின்புறம் ஓபிஎஸ், இபிஎஸ் படங்கள் இன்றி பேனர் அமைக்கப்பட்டுள்ளது. வழி நெடுகிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒருநாள் முன்னதாக, இன்றே சென்னைக்கு வந்துவிடுமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தி உள்ளதால், அதற்கு ஏற்ப பயண ஏற்பாடுகளை நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
நாளை காலை 9.15 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை காலை 9 மணிக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.