மதுரை: ரசாயன உரங்களுக்கு செலவு செய்யமுடியாமல் பணத்தை மிச்சப்படுத்தும் வகையில் இயற்கை முறை விவசாயத்திற்கு மாறிய செல்லம்பட்டி விவசாயி அதன்மூலம் வருவாய் ஈட்டுகிறார். மேலும், இயற்கை முறையில் விளைந்த விளை பொருட்கள் உண்பதையே வாழ்க்கை முறையாக்கியுள்ளார்.
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அருகே சக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி என்.கருணாகரன் என்ற அலெக்ஸ் (வயது 50). இவர் தனக்கு சொந்தமான கிணற்றுடன் கூடிய 3 ஏக்கர் நிலத்தில் ரசாயன உரங்களிட்டு நெல், காய்கறிப் பயிர்கள் செய்தார். இதில் ரசாயன உரங்கள், இடுபொருட்களுக்கு செலவு செய்ய முடியாமல் இயற்கை விவசாய முறைக்கு மாறினார். பணச் செலவின்றி இயற்கை முறையில் விவசாயம் செய்து வருவாய் ஈட்டி வருகிறார்.
இதுகுறித்து விவசாயி என்.கருணாகரன் கூறியதாவது: ”ரசாயன உரங்கள் மூலம் நெல்மற்றும் காய்கறி பயிர்கள் செய்து வந்தேன். இதில் உரங்கள் இதர இடுபொருட்களுக்கு செலவுகள் அதிகரித்தது. இதனால் நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் மற்றும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்து அறிந்தேன். அதன்மூலம் நாட்டு மாடுகள் வளர்த்து இயற்கை உரங்கள், இடுபொருட்கள் உற்பத்தி செய்து இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன்.
கடந்த 4 ஆண்டுகளாக இயற்கை முறை விவசாயம் செய்து வருகிறேன். நாட்டு மாடுகள் மூலம் பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தக் கரைசல், மீன் அமினோ அமிலங்கள் என பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மூலம் இயற்கை உரங்கள் அளிக்கிறேன். மேலும் மூலிகை பூச்சி விரட்டிகள் தெளித்து பூச்சிகளை விரட்டுகிறோம். ஐந்திலை கசாயம், மூலிகை பூச்சி விரட்டிகள் பயன்படுத்துகிறேன்.
பாரம்பரிய நெல்ரகங்களான மாப்பிள்ளைச்சம்பா, கருங்குறுவை, சின்னார், ஆத்தூர் கிச்சடி சம்பா, கருப்பு கவுனி, வைகுண்டா என பல பாரம்பரிய ரகங்களை பயிரிட்டு விற்பனை செய்து வருகிறேன்.
இயற்கை முறைக்கு வந்துவிட்டால் பணம் செலவழிப்பதை மிச்சம் செய்யலாம். மேலும், எந்த ரசாயனமும் கலக்காத அரிசிகள், காய்கறிகள், நாட்டு மாடுகள் மூலம் பால், நெய் என ஆரோக்கியமான உணவு வகைகளையே எங்களது குடும்பத்தினர் உண்டு களிப்புடன் வாழ்ந்து வருகிறோம். இயற்கை முறையில் விளைந்த விளை பொருட்கள் உண்பதையே வாழ்க்கை முறையாக்கியுள்ளோம், என்றார்.