இயற்கை வேளாண்மைப் பாதையில் முன்னேறி, உலகளாவிய வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டில் காணொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா இயல்பிலும் பண்பாட்டிலும் வேளாண்மை சார்ந்த நாடாக இருந்து வருவதாகத் தெரிவித்தார்.
ஏழைகள் அடித்தட்டு மக்களுக்கான நலவாழ்வுத் திட்டங்களில் ஊராட்சிகள் முதன்மையான பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார். ஒவ்வொரு ஊராட்சியிலும் 75 விவசாயிகளை இயற்கை வேளாண்மையுடன் இணைக்கும் சூரத்தில் உருவாகியுள்ள முறை, நாட்டுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் எனக் குறிப்பிட்டார்.
சான்றளிக்கப்பட்ட இயற்கை வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதாகக் குறிப்பிட்டார்.
இலட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாரம்பரிய இயற்கை வேளாண் திட்டத்தில் நாடு முழுவதும் முப்பதாயிரம் இயற்கை வேளாண் தொகுதிகள் உருவாக்கப்பட்டு, அவற்றின்கீழ் 10 இலட்சம் எக்டேர் நிலப்பரப்பு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.