கொழும்பு: இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், அங்கு லட்சக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை கண்டுபிடித்து எண்ணுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இலங்கையில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வராததை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி, அதிபர் மாளிகைக்குள் லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் நேற்று நுழைந்தனர். முன்னெச்சரிக்கையாக வெளியேறிய அதிபர் கோத்தபய, வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டார். அமைச்சர்களும் ஒவ்வொருவராக பதவியை துறக்கின்றனர். அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
அதில், ஒரு வீடியோவில், நாட்டில் கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்ட நிலையிலும், அதிபர் மாளிகைக்குள் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதனை போராட்டக்காரர்கள் எண்ணுவது போன்ற காட்சிகள் அடங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த பணம் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், தீவிரமாக ஆராய்ந்து உண்மையை வெளிக்கொண்டு வந்தால் மட்டுமே, நிலைமையை புரிந்து கொள்ள முடியும் என்றனர்.
இலங்கை மதிப்பில் 17. 85 மில்லியன் அளவுக்கு( 17,850,000 இலங்கை ரூபாய்) பறிமுதல் செய்து பாதுகாப்பு படையிடம் ஒப்படைத்துள்ளோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா தளமானது
போராட்டக்காரர்களின் பிடியில் அதிபர் மாளிகை வந்ததை தொடர்ந்து, அது புதிய சுற்றுலா தளமாக உருவெடுத்துள்ளது. தற்போது, மாளிகையை பார்ப்பதற்கு என்றே ஏராளமானவர்கள் வருகின்றனர்.
அப்படி வருபவர்கள், அங்குள்ள சொகுசு கார் முன்பு நின்று செல்பி எடுத்து கொள்கின்றனர்.
அதிபர் மாளிகையில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்திலும் ஏராளமானவர்களை பார்க்க முடிகிறது.
நீச்சல் குளம் முன்பும் செல்பி எடுக்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக போராட்டக்காரர்கள் கூறுகையில், ” கடந்த 74 வருடங்களாக அவர்கள் தொடர்ந்த அமைப்பு நமது மக்களை, உரிமையை அடக்குவதாக உள்ளது என கொடிபிடித்து காண்பித்தோம். மக்கள் மீது அடக்குமுறையை காண்பித்தனர். ராணுவத்தை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றினர். இதனால், தான் கறுப்பு கொடியை காண்பித்து எதிர்ப்பை காண்பித்தோம். அரசின் அமைப்பை இளைஞர்கள் எதிர்க்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்கா அறிவுரை
இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட மோசமான பொருளாதார நிலைமைகள் தொடர்பாக இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்கும் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் தீர்வுகளை கண்டறிந்து அமல்படுத்துவதற்கு இந்த அரசாங்கத்தையோ அல்லது அரசியலமைப்பு ரீதியாக தேர்வு செய்யப்பட்ட எந்தவொரு புதிய அரசாங்கத்தையும் விரைவாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த தருணத்தை, நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் இலங்கை பார்லிமென்ட் அணுக வேண்டும் என்றார்.
ரணில் வீட்டிற்கு தீவைத்த 3 பேர் கைது
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அவரது வீட்டையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். தொடர்ந்து அங்கு தீவைக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மவுன்ட் லாவினா பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர், கதேவதா மற்றும் காலேயை சேர்ந்த 24 மற்றும் 28 வயது மதிக்கத்தக்கவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இது தொடர்பாக செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர். அப்போது, அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் பலர் படுகாயமடைந்தனர். இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்