இலங்கையில் இப்போது ஜனாதிபதியும் இல்லை, பிரதமரும் இல்லை என்ற சூழல்தான் நிலவுகிறது. மொத்தத்தில் தலைமையே இல்லை. திரும்பும் வீதியெல்லாம் மக்கள் ஆர்ப்பாட்டத்தை மட்டுமே காணமுடிகிறது. மொத்த குடிமக்களும் வீதியில் இறங்கி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். பதவியில் எஞ்சியிருந்த கோத்தபய ராஜபக்சேவும் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
சமீபமாகப் பதவியேற்ற பிரதமர் ரணிலும், தான் பதவி விலகத் தயார் என்று கூறியுள்ளார். இவ்வாறிருக்க இலங்கையின் தலைமை வெற்றிடத்தை யார் நிரப்புவார்? நாட்டையும் தலைமையும் மீட்டெடுக்க என்னென்ன சாத்தியக்கூறுகள் உள்ளன?
தற்போது வெடித்திருக்கும் தீவிர போராட்டங்களின் பின்னணி!
கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கிய ஆர்ப்பாட்டம் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ராஜபக்ஷேக்களுக்கு எதிராக மூண்ட இந்தப் போராட்டத்தின் முதல் வெற்றியாக மே 9-ம் தேதி மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து தற்போது கோத்தபய ராஜபக்சேவையும் ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கி எறிந்திருக்கிறார்கள் போராட்டக்காரர்கள். இந்தப் போராட்டங்களை நசுக்குவதற்கு ராஜபக்சே தரப்பிலிருந்து செய்த எல்லா முயற்சியும் வீண் போக, இறுதியாக ரணிலை பிரதமராக்கி அதிபர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார் கோத்தபய.
ஆனால் இந்த முயற்சியும் தற்காலிக பலன்தான் அளித்ததே ஒழிய, நீடிக்கவில்லை. ரணிலின் பாரம்பர்ய வீட்டையும் எரித்த போராட்டக்காரர்கள், ரணிலுக்கு எதிரான தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் ராஜபக்ஷக்கள்தான் என்று நம்பும் இலங்கை குடிமக்கள், மொத்தமாக அவர்களைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று விடாப்பிடியாகப் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றுள்ளனர். கோத்தபய ராஜபக்சே தற்போது அவரது அதிகாரபூர்வ மாளிகையில் இல்லை. அவரது அலுவலகமும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போதைக்கு அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, பதவி விலகுவதுதான்!
யார் அடுத்த அதிபர்?
இலங்கையில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து நம்மிடம் பேசிய இலங்கை பத்திரிகையாளர் நிலாந்தன், “பிரதமர் அல்லது சபாநாயகர் அடுத்த ஜனாதிபதியாக வரலாம். நாடாளுமன்றத்தில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் ஒரு மாத காலத்துக்குள் ஜனாதிபதி நியமனம் செய்யப்பட வேண்டும். இப்போது நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி-க்களை வைத்திருப்பது ராஜபக்ஷக்களுடைய கட்சிதான்.
ஆனால் அவர்கள் சார்பில் ரணில் அதிபர் ஆவதை மக்கள் விரும்பவில்லை, உட்கட்சியினரும் அதை விரும்பமாட்டார்கள். அதனால் சபாநாயகரான, மகிந்த யாப்பா அபேவர்தன அதிபர் ஆகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆனால் தற்போதைய சபாநாயகரும் கோத்தபய கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிப்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
ரணிலைப் பொருத்தமட்டில் உட்கட்சி, எதிர்க்கட்சி ஆதரவு இல்லை. மக்கள் ஆதரவு இல்லை என்றாலும், வெளி உலகிற்கு ரணில் தரமான தலைமையாகக் காணப்படுகிறார். மேற்கு நாடுகள் மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றுக்கு அவர் பரிச்சயமான ஒரு தேர்வு. ஆக, ரணில் அதிபராகாத பட்சத்தில் வரக்கூடிய புதிய தலைவர், மேற்கு நாடுகள் மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றின் நம்பிக்கையைப் பெற்றெடுக்கவேண்டும்.
அடுத்து என்ன?
அனைத்துக் கட்சி அரசு அமைக்கப் பேச்சுவார்த்தை நடந்தபோது , அதற்கு ஒத்துழைக்க எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்தன. தங்களுக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் தாங்களே அரசமைக்க முடியும் என்று சஜித் பிரேமதாஸவின் எஸ்.ஜே.பி, ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக அறிவித்திருக்கின்றன. சரி, தேர்தல் அறிவிக்க வாய்ப்புள்ளதா என்று பார்த்தால், நீடிக்கும் பொருளாதார சரிவால், தேர்தல் நடத்தவும் அரசிடம் பணம் இல்லை.
மேற்கத்திய ஜனநாயகங்களில் இது போன்ற நெருக்கடி வந்தால், தேசிய அரசாங்கமே தீர்வாக முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால் இலங்கை தீவில் தேசிய அரசாங்கம் அதாவது, தமிழ், சிங்கள முஸ்லிம் மக்களை இணைத்து ஆட்சியமைக்கும் ஒற்றுமையான ஜனநாயகம் இல்லை” என்று இலங்கையின் அரசியல் நிலவரத்தை விரிவாக விளக்கினார்.