நார்ட் ஸ்ட்ரீம் 1 எரிவாயுக் குழாயின் பராமரிப்புக்குத் தேவையான பழுதுபார்க்கப்பட்ட ரஷ்ய எரிவாயு டர்பைனை கனடா ஜேர்மனிக்கு திருப்பித் தரும் என கனேடிய அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
குறித்த எரிவாயு டர்பைனை ரஷ்யாவுக்கு அளிப்பதால் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளில் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொழில்துறை உற்பத்தியை உள்ளடக்கிய ரஷ்யாவின் எரிசக்தி துறைக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விரிவுபடுத்துவதாகவும் கனடா அறிவித்துள்ளது.
மட்டுமின்றி, கனடாவின் புதிய தடைகள் நிலம் மற்றும் குழாய் போக்குவரத்து மற்றும் உலோகங்கள் மற்றும் போக்குவரத்து, கணினி, மின்னணு மற்றும் மின் சாதனங்கள் மற்றும் இயந்திரங்களின் உற்பத்திக்கு பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஐரோப்பாவுக்கான எரிவாயு அளவை 40% வரையில் ரஷ்யா குறைத்துள்ளது.
கனடாவில் பராமரிப்பில் இருக்கும் எரிவாயு டர்பைன் உரிய நேரத்தில் தங்களுக்கு கிடைக்காததே காரணம் எனவும் ரஷ்யா கூறி வந்துள்ளது.
போதிய எரிவாயு விநியோகம் இல்லாமல் போனால் ஜேர்மனியின் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும், ஜேர்மானிய மக்கள் குளிர் காலத்தில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் கனடா தெரிவித்துள்ளது.
ஆனால், ரஷ்யாவின் மிரட்டலுக்கு பயந்து கனடா அடிபணிந்துவிட்டதாக உக்ரைன் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை பலவீனப்படுத்த வழிவகுக்கும் ஒரு ஆபத்தான முன்மாதிரி இதுவெனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.