கீவ் : உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யா ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியதில், அப்பாவி மக்கள், 15 பேர் பலியாகினர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்கும் இந்த போரில், கடந்த வாரம், லுஹன்ஸ்க் மாகாணத்தின் கடைசி நகரமான லைசிசான்ஸ்க்கும் ரஷ்யாவிடம் வீழ்ந்தது. இதன் வாயிலாக உக்ரைன் ராணுவத்தை எதிர்த்து, எட்டு ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வரும் டோன்பாஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதி ரஷ்யா வசம் வந்துள்ளது.
இந்நிலையில், டோன்பாசின் டோநெட்ஸ்க் மாகாணத்தில் ரஷ்யா ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியது. சசிவ் யர் என்ற நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ராக்கெட் குண்டு விழுந்து வெடித்தது. இதில் அந்த குடியிருப்பு இடிந்து விழுந்தது. அங்கு வசித்து வந்தோர் குண்டு வீச்சுக்கு பலியாகினர்.
இது குறித்து டோநெட்ஸ் மாகாண கவர்னர் பவ்லோ கிரிலென்கோ கூறியதாவது: குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்துவதில்லை என, ரஷ்யா கூறி வருகிறது. ஆனால் அதற்கு மாறாக குடியிருப்புகளில் குண்டு வீசுகிறது. சசிவ் யர் நகரில் நடந்த ராக்கெட் குண்டு தாக்குதலைத் தொடர்ந்து அங்கு மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் குண்டு வீச்சில் பலியான, 15 பேரின் உடல்களை மீட்டனர்.
கட்டட இடிபாடுகளில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். அவர்களில் சிலர் மொபைல்போனில் தொடர்பு கொண்டனர். அவர்களை காப்பாற்ற, இடிபாடு களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement