சென்னை: உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தைகளில் விற்பனை களைகட்டியுள்ளது. பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான, பக்ரீத் இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் பத்தாம் நாள் இந்த பக்ரீத் பண்டிகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த வருடம் ஜூலை 10 ஆம் தேதியான இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. *பக்ரீத் வரலாறுஇஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அரபியர்கள்.*தியாகம்இப்ராஹிமின் மகன் இஸ்மாயீல் பால்ய பருவத்தை அடைந்தபொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டார். இதைப்பற்றி மகனிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியோடு பலியிட துணிந்த பொழுது, சிஃப்ரயீல் என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து நிறுத்தினார்.*சிறப்பு தொழுகைகள்ஒரு ஆட்டினை இறக்கி வைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டினை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டார். இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாக திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகைகள் மேற்கொள்கின்றனர்.*இறைவன் பெயரால் பலிஇந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கினை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.*ஆடு விற்பனைபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஆடு, மாடு சந்தைகளில் விற்பனை களைகட்டியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளியில் மாபெரும் ஆட்டுசந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, ஆத்தூர், ஈரோடு மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தில் இருந்தும் விவசாயிகள் ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் மட்டுமின்றி, குருபர ஆடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஒரே நேரத்தில் குவிந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். பக்ரீத்பண்டிகை என்பதால் இதில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக் கிடாய்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையில் தரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வழக்கத்தை விட பக்ரீத் பண்டிகை என்பதால் ஆடுகளின் விலை அதிகரித்து உள்ளதால் ஆட்டு இறைச்சி விலை கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்ய நேரிடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல் ஆட்டின் விலை ஆயிரம் முதல் 4000 வரையில் அதிகரித்திருப்பதாகவும் இருந்தாலும் தியாகத் திருநாளில் ஏழை எளிய மக்களுக்கு இறைச்சி வழங்க வேண்டும் என்கிற நோக்கில் கூடுதல் விலை கொடுத்து ஆடுகளை வாங்கி செல்வதாகவும் தெரிவித்தனர் சுமார் 3 கோடிக்கு விற்பனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்கள்.