ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவராக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சியின் நிரந்தர தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வுசெய்யப்பட்டதாகவும் இதற்காக கட்சி விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்திற்கு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஒரு கட்சிக்கு வாழ்நாள் அல்லது நிரந்தர தலைவராக ஒருவரை தேர்வுசெய்து தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்றால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்பொறுப்புக்கு தேர்தல் நடத்தவேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர முதலமைச்சரான ஜெகன்மோகன்ரெட்டி, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள தெலங்கானாவிலும் ஆட்சியை பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவராக இருந்த ஜெகனின் தாயார் விஜயம்மா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தெலங்கானாவில் மகள் சர்மிளா தலைமையில் இயங்கும் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை வலுப்படுத்த இருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM