சென்னை: திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்பட்டதால் அவரிடம் இருந்து விலகியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் இபிஎஸ் இல்லம் முன்பு செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி நேற்று கூறியதாவது:
நான் திமுகவுடன் தொடர்பு வைத்து, பெட்ரோல் பங்க்கை பெற்றிருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றம்சாட்டி இருந்தார். அந்த பெட்ரோல் பங்க்கை நடத்துவதற்கான உத்தரவு கடந்த 2017-ல் அதிமுக ஆட்சியில் என் மகனுக்கு வழங்கப்பட்டது. கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நான்கரை ஆண்டுகள் இபிஎஸ்ஸுடன் துணை முதல்வராக ஓபிஎஸ் பயணித்தபோது, கோடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக எதுவும் பேசாமல் இருந்துவிட்டு, இப்போது அவரது மகன் மூலமாக பேச வைக்கிறார். எங்கள் நற்பெயரை கெடுப்பதற்காக இப்படி செய்கிறார். நீண்டகாலமாக அவரோடு அரசியல் பயணம் மேற்கொண்ட எங்களை போன்றவர்களுக்கு இது வேதனையாக இருக்கிறது.
தர்மயுத்தம் தொடங்கியபோது அவரோடு சேர்ந்து வேகமாக இயங்கினோம். பல்வேறு கருத்துகளை பரிமாறிக் கொள்வோம். இப்போது, திமுகவோடு ஓபிஎஸ் அனுசரணையாக சென்றுகொண்டிருக்கிறார். கருணாநிதியின் பராசக்தி வசனத்தை புகழ்கிறார். இலங்கை தமிழர்களுக்கு நிதி வழங்கும் விவகாரத்தில், யாரிடமும் கலந்துபேசாமல், முதல்வர் ஸ்டாலினை திருப்திப்படுத்த, தன் குடும்பம் சார்பாக ரூ.50 லட்சம் தருவதாக அறிவிக்கிறார். அப்படிப்பட்டவரோடு இணைந்து பயணிப்பது இயலாது என்பதால்தான், விலகியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
“ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கே.பி.முனுசாமி, “நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். திட்டமிட்டபடி 11-ம் தேதி பொதுக்குழு நடக்கும். கட்சிக்கு எதிராக செயல்படுவோர் மீது அராஜகமாக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். படிப்படியாக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.