ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் தனது செல்வாக்கை நீருபிக்க ஓ.பி.எஸ் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்ததைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் – இ.பி.ஸ் இடையேயான மோதல் ஒரு பெரிய சூறாவளியாக வீசிவருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் விடியற் காலை தீர்ப்புக்கு பிறகு, ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு பெரும் களேபரமாக முடிந்தது. அப்போது, பொதுக்குழு கூட்டம் மீண்டும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றம் டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டு தீர்வு காண முடியாது. பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்திக்கொள்ளலாம். இதை நட்பார்ந்த முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும். வேறு ஏதாவது நிவாரணம் வேண்டுமானால், உயர் நீதிமன்றத்தை நாடி பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
இதனிடையே, ஜூலை 11 ஆம் தேஹ்டி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ் மற்றும் வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வியாழக்கிழமை முதல் விசாரணை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில் உயர் நீதிமன்றம், தீர்ப்பை ஜூலை 11 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஒத்தி வைத்தது. அதே நேரத்தில், அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு கூடுகிறது.
அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர்களில் எடப்பாடி பழனிசாமியின் கைகளே ஓங்கியுள்ளது. ஓ. பன்னிர்செல்வத்தின் கைகள் சற்று இறங்கியே உள்ளது.
இந்த நிலையில்தான், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேசி வெளியிட்டுள்ள ஆடியோவில், அதிமுகவில் தனது செல்வாக்கை நீருபிக்க ஓ.பி.எஸ் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ரவீந்திரன் துரைசாமி அந்த ஆட்டியோவில் கூறியிருப்பதாவது: “என்ன செய்யப் போகிறார் ஓ.பி.எஸ்? ஓ.பி.எஸ்.க்கான போராட்டத்தை ஓ.பி.எஸ்-தான் செய்தாக வேண்டும். அதுதான் அவருக்கு பலத்தைக் கொடுக்கும். எடப்பாடி தரப்பு பொதுக்குழு நடக்கிற இடத்திற்கு போய் உண்ணாவிரதம் இருந்தார் என்றால் அது பெரிய சண்டையாக இருக்கும். பெரிய போராளியாக செம்ப நாட்டு மறவர் களத்தில் நிற்கிறார் என்று என்று நாங்கள் எல்லாம் பெருமையாக பேசிக்கொள்வோம். சகோதர ஜாதிதானே. பாதிக்கப்பட்டவர் என்பது போல ஒரு இரக்கத்தை உருவாக்க வேண்டும் என்றால், அவர் கட்சி அலுவலகம் முன்னாடியும் உண்ணாவிரதம் இருக்கலாம். அதைத் தாண்டி வழக்கமான ஜெயலலிதா சமாதி, அப்போது அதிமுக ஆளும் கட்சி என்கிற இடத்தில் இருந்தது. அது ஒரு பெரிய சண்டை. இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிற தோற்றுப் போன ஒரு கட்சியின் சண்டை. இதில் அவர் வாக்கு வங்கியை நிரூபித்து ஆக வேண்டும். அது அதிகாரத்துக்கான சண்டை. இது வாக்கு பங்கீடு சண்டை.
எல்லோருமே சேர்ந்து ஸ்டாலினை தோற்கடிக்க முடியவில்லை என்கிறபோது, இந்த சண்டைக்கு அவ்வளவு பெரிய முக்கியத்துவம் வராது. இருந்தாலும் வாங்கு பங்கீடு சண்டையில் கணிசமாக ஒரு வாக்கு பங்கீட்டை எடுத்து ஓ.பி.எஸ் ஒரு தலைவராக நிற்க வேண்டும் என்றால், அவர் இந்த இடத்தில் சண்டை போட்டுதான் ஆக வேண்டும். நாளைக்கு கவனத்தை அவர் பக்கம் திருப்பி ஆக வேண்டும். இது ஒரு இலவச ஆலோசனைதான். காரணம், மறவர் என்றால் நாடார் எதிர்த்துதானே நிற்பார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். அந்த அளவுக்கு நாங்கள் அப்படி நிற்க வேண்டிய அவசியமில்லை. அதுவும் ஓ.பி.எஸ்-க்கு எதிராக பண்ணியிருக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், இது ஒரு இலவச சப்போர்ட்தான்.
இதைத்தாண்டி அவரிடமும் வியூகங்கள் இருக்கலாம். நாளைக்கு (ஜூலை 11) கவனத்தை அவர் பக்கம் திருப்ப வேண்டியது அவசியம்.
அந்த கவனத்தை அவர் பாதிக்கப்பட்டவர் என்ற இரக்கத்தை முன்வைத்து திருப்பப் போகிறாரா? அல்லது சண்டை போட்டு திருப்பப் போகிறாரா? இது எல்லாம் அவர் கையிலதான் இருக்கிறது. அவருக்காக மற்றவர்கள் சண்டை போட நினைத்தால், வாக்கு விகிதம் அவர் நினைத்த மாதிரி வராது. அவர்தான் சண்டை போட்டு ஆக வேண்டும். அவர் என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம்.” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“