பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் குடகு, மடிகேரி, தலக்காவிரி, ஹாசன், மைசூரு ஆகிய காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவருகிறது. இரவு பகலாக தொடரும் கனமழையால் காவிரி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதேபோல கபிலா ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை பெய்வதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 121.75 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 34 ஆயிரத்து 430 கனஅடி நீர் வந்துக்கொண்டிருப்பதால், அணையில் இருந்து வினாடிக்கு 4,,817 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் இன்னும் ஒரு வாரத்தில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைசூரு மாவட்டம் ஹெச்.டி.கோட்டை அருகேயுள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 14,481 கனஅடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. இதனால் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,281 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடகு, மைசூரு, ராம்நகர் ஆகிய மாவட்டங்களில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.