சென்னையில் போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம் 84 நாட்களில் ரூ.11,31,68,025 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை 2018 மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாற்றப்பட்டது. ஆரம்ப காலங்களில் அபராதம் செலுத்துவது அதிகமாக இருந்த போதிலும், சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாததால் அது காலப்போக்கில் தேக்கமடைந்தது. இந்த தேக்க நிலையை சரி செய்ய சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் அழைப்பு மையங்கள் முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்தனர்.
அதன்படி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த 11.04.2022 அன்று 10 அழைப்பு மையங்களை தொடங்கி வைத்தார். அண்ணாநகர் TROZ மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டறை ANPR கேமரா மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் கையாள்வதற்காக மேலும் இரண்டு தனித்தனி அழைப்பு மையங்கள் பின்னர் சேர்க்கப்பட்டன. ஆக மொத்தம் இந்த 12 காவல் அழைப்பு மையங்களின் 84 நாட்கள் செயல்திறன் 11.04.2022 முதல் 03.07.2022 வரை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த 12 காவல் அழைப்பு மையங்களிலிருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அபராதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் மேற்படி வழக்குகள் மெய்நிகர் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த முயற்சியின் காரணமாக கடந்த 84 நாட்களில் 2,19,742 பழைய வழக்குகளுக்கான (மார்ச் 2019 முதல் பதியப்பட்ட பழைய வழக்குகள்) அபராதத் தொகை ரூபாய் 3,31,49,275 விதிமீறிய வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் அழைப்புச் செய்து 1,674 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூபாய் 1,68,60,000 அபராதமாக வசூலிக்கப்பட்டதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலனோர் சராசரியாக ரூபாய் 10,000 அபராதம் செலுத்தி உள்ளனர். ஆக மொத்தம் 2,21,416 பழைய வழக்குகளில் ரூபாய் 5,00,09,275 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் 2,58,835 புதிய வழக்குகளுக்காக ரூபாய் 6,31,58,750 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் இந்த 84 நாட்களில் 4,80,251 வழக்குகளில் மொத்தம் ரூபாய். 11,31,68,025 அபராத தொகையாக வசூலித்தது. மேலும் அபராத தொகை செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்த, மொத்த எஸ்.எம்.எஸ் அமைப்பு, கட்டண வசதி மையம் மற்றும் கட்டண தளங்களுடன் ஒப்பந்தம் உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அனைத்து வாகன ஓட்டுநர்களும் தங்கள் வாகனத்திற்கு எதிராக ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்த்து, அபராதத் தொகையை விரைவில் செலுத்துமாறு அழைப்பு விடுக்கப்படுவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாமே: வாகன சோதனையில் சிக்கிய ரூ.90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல எச்சம் – 6 பேர் கைதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM