காளி தேவியின் ஆசி இந்தியாவுக்கு உண்டு: மோடி| Dinamalar

கோல்கட்டா : ”காளி தேவியின் அளவற்ற ஆசி, எப்போதுமே இந்தியாவுக்கு உண்டு. ஒரே பாரதம், மகத்தான பாரதம் என்ற கொள்கையைத் தான், நம் நாட்டின் ஞானிகள் உறுதியாக பின்பற்றி வந்துள்ளனர்,” என, பிரதமர் மோடி பேசினார்.

மேற்கு வங்க மாநிலத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் ராமகிருஷ்ண மடத்தின் முன்னாள் தலைவரான சுவாமி ஆத்மஸ்தானந்தாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசியதாவது:ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், காளி தேவியைப் பற்றி தெளிவான பார்வை உடையவர். அவரது சீடரான சுவாமி விவேகானந்தரும் காளி தேவியின் ஆன்மிக பார்வையை நன்கு உணர்ந்தவர்.

வழிகாட்டி



இதன் காரணமாகவே, விவேகானந்தருக்கு அபாரமான ஆற்றலும், வலிமையும் கிடைத்தது.சுவாமி ஆத்மஸ்தானந்தாவுடன் பழகிய அனுபவம் எனக்கு உண்டு. காளி தேவியின் வல்லமை பற்றி அவர் எப்போதும் குறிப்பிடுவார். காளி தேவியிடம், அவருக்கு உள்ள பக்தி என்பது இயற்கையானது. நம்பிக்கை புனிதமாக இருந்தால், காளி தேவியின் சக்தியே நமக்கு வழிகாட்டும்.

காளி தேவியின் அளவற்ற ஆசி, நம் நாட்டுக்கு எப்போதும் உண்டு. இந்த ஆன்மிக சக்தியுடன் தான், இந்தியா உலக நாடுகளுக்கு வழிகாட்டி வருகிறது. எல்லா விஷயங்களுமே காளி தேவியின் உணர்வால் நிறைந்துள்ளன. மேற்கு வங்கத்தில் நடக்கும் காளி பூஜையில் இவை வெளிப்படுகின்றன. விவேகானந்தர், சர்வதேச அளவில் இந்தியாவை சிறந்த நாடாக மாற்றுவதற்காகவே வாழ்ந்தவர்.

அவரது தாக்கம், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்று எதிரொலிக்கிறது. அவரது பயணங்கள், அடிமைத்தனத்திலிருந்து, நாட்டு மக்களை தட்டி எழுப்பின. புதிய நம்பிக்கையை ஏற்படுத்தின. இந்த பாரம்பரியத்தையும், நடைமுறையையும் சுவாமி ஆத்மஸ்தானந்தா, தன் வாழ்நாள் முழுதும் பின்பற்றினார். ‘ஒரே பாரதம், மகத்தான பாரதம்’ என்ற கொள்கையைத் தான் நம் நாட்டு ஞானிகள் உறுதியாக பின்பற்றி வந்துள்ளனர். ராமகிருஷ்ணா மடம் நிறுவப்பட்டதன் நோக்கமும் இதுதான்.

சர்ச்சை



இந்த மடம், நம் நாட்டில் மட்டுமல்லாமல், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில் பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம், நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளது.தன்னைத் தானே மேலே உயர்த்தி, சமூகத்துக்காக உழைப்பவர் தான் சன்னியாசி. சமூகத்துக்காக வாழ்பவரே சன்னியாசி. விவேகானந்தர், சன்னியாசத்துக்கு நவீன வடிவம் கொடுத்தார். ஆத்மஸ்தானந்தா, அதை அப்படியே பின்பற்றினார். இவ்வாறு அவர் பேசினார்.

காளி தேவியைப் பற்றி திரிணமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்து, சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தைச் சேர்ந்த பெண் இயக்குனர் தயாரித்த, காளி தேவியைப் பற்றிய ஆவணப்படத்தின் ‘போஸ்டரும்’ சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் காளி தேவியின் பெருமையைப் பற்றி, பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார்.

பிரதமர் பெருமிதம்

குஜராத் மாநிலம் சூரத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாய பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு நேற்று நடந்தது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:பொருளாதார வெற்றியின் அடிப்படையே, இயற்கை விவசாயம் தான். இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவது, இயற்கைக்கும், சுற்றுச் சூழலுக்கும் செய்யும் சேவையாகவே கருதப்படும்.இயற்கை விவசாயம் என்பது, பூமித் தாய்க்கு செய்யும் சேவை. இதன் வாயிலாக மண்ணின் தரத்தையும், உற்பத்தி திறனையும் மேம்படுத்த முடியும். பொருளாதார ரீதியாக வெற்றியையும் பெற முடியும். வரும் காலங்களில் இயற்கை விவசாயம் என்பது மிகப் பெரிய இயக்கமாக மாறும். கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என பழைய பல்லவியை பாடியவர்களுக்கு, ‘டிஜிட்டல் இந்தியா’ உள்ளிட்ட பல விஷயங்களில், இந்த நாடு சரியான பதில் அளித்துள்ளது. விரைவில் ஏராளமான விவசாயிகள் இயற்கை விவசாயம் என்ற மாற்றத்தை ஏற்படுத்துவர். இதனால் அவர்களுக்கு பெரிய அளவில் பயன் கிடைக்கும். இயற்கை விவசாயத்தில் தற்போது சூரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், இந்த நாட்டுக்கே வழிகாட்டியாக அமையும். இந்த மிகப் பெரிய மாற்றத்துக்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.