புதுடெல்லி: குஜராத்தில் 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வத்காம் தொகுதியிலிருந்து சுயேச்சை எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜிக்னேஷ் மேவானி. அதன்பின் அவர் வெளிப்படையாக காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சுயேச்சை எம்எல்ஏ. ஜிக்னேஷ் மேவானியை குஜராத் காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக நியமிக்கும் முடிவுக்கு காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் பொதுச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் வேணு கோபால் கையெழுத் திட்டுள்ளார். எம்எல்ஏ.,க்கள் லலித் காகதாரா, ஜிக்னேஷ் மேவானி, ருத்விக் மக்வானா, அம்பாரீஷ் ஜே தர், ஹிம்மத்சின்க் படேல், காதிர் பிர்சதா மற்றும் இந்திரவிஜய்சிங் கோஹில் ஆகியோர் குஜராத்காங்கிரஸ் கமிட்டி செயல்குழுதலைவர்களாக நியமிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயேச்சை எம்எல்ஏ ஒருவர், வேறொரு கட்சியில் இணைந்தால், அவரை தகுதி நீக்கம் செய்யலாம் என அரசியல் சாசனத்தில் 10-வது பிரிவு கூறுகிறது. பேரவைத் தலைவரிடம் யாராவது புகார் அளித்தால், அவர் ஜிக்னேஷ் மேவானியை தகுதி நீக்கம் செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.