ஹரியானா மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தையை மகன் இரும்புக் குழாயால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் பானிபட்டின் ஜவஹர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் 65 வயதான மங்கத் ராம். இவருக்கும் இவரது மகன் பிரேம் குமாருக்கும் ஜூலை 8 அன்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரேம் தனது தந்தை மங்கத் ராமை குச்சிகளாலும் இரும்புக் குழாயாலும் சரமாரியாக தாக்கத் துவங்கியுள்ளார். அப்போது தாக்குதலை தடுக்க முயன்ற தனது தாயையையும் தாக்கியுள்ளார் பிரேம்.
படுகாயமடைந்த மங்கத் ராம் வீட்டிலேயே உயிரிழந்து விட்டார். மங்கத் ராமின் மகள் ரமா ராணி அளித்த புகாரை அடுத்து பிரேம் குமார் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302 (கொலை) இன் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரி அஜய் குமார் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM