வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மைசூரு : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய இரண்டு அணைகளிலிருந்து, தமிழகத்துக்கு வினாடிக்கு 1 லட்சத்து 4,356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மாண்டியா, மைசூரு, ஹாசன், பெங்களூரு ரூரல், ராம்நகர் ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கே.ஆர்.எஸ்., ஹாரங்கி, கபினி, ஹேமாவதி என காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளின் நான்கு அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாகி நேற்று முன்தினமே நிரம்பின.அணைகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகபட்ச தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ்., அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி. நேற்று மாலை நிலவரப்படி 123.12 அடி உயரம் வரை தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 49 ஆயிரத்து 244 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 74 ஆயிரத்து 356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதுபோன்று, கபினி அணையின் மொத்த கொள்ளளவு 2,284 அடி. இதில், 2,282.71 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 26 ஆயிரத்து 847 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சுற்றுவட்டார பகுதியினர் அணை பகுதிகளில் நின்று கொண்டு அபாயத்தை உணராமல், ‘செல்பி’ எடுக்கின்றனர். இரு அணைகளிலிருந்தும், வினாடிக்கு 1 லட்சத்து 4,356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் இன்று இரவுக்குள் தமிழகத்தின் பிலிகுண்டுலுவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிகபட்ச தண்ணீர் வெளியேற்றப்படுவதால், காவிரி கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement