கொச்சியில் கடல் சீற்றம் காரணமாக 10 வீடுகள் சேதம்

பெரும்பாவூர்,

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரள அரசு தீவிரமாக செய்து வருகிறது. மேலும் கொச்சி, எடவணக்காடு, வைப்பின் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக எடவணக்காடு பகுதியில் கடற் கரை பகுதிகளில் கடல் சீற்றம் மிக அதிகளவு உள்ளது. இதனால் 10 வீடுகள் சேதம் அடைந்தது.

கடற்கரை ஓரங்களில் உள்ள வீடுகள் அனைத்திலும் கடல் நீர் புகுந்ததால் அங்கு மக்கள் வசிக்க இயலாமல், மீட்கப்பட்டு தனி முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பல வீடுகளிலும் உணவு சமைக்க வழி இல்லாத காரணத்தால் வருவாய் துறையினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.

கண்ணமாலி தேவாலயத்துக்கு அருகில் ஆம்-ஆத்மி கட்சியினர் அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் மணல் தடுப்பு சுவர் எழுப்பி கடற் சீற்றத்தை தணிக்க முயன்று வருகின்றனர். ஆனாலும் கடல் சீற்றம் கட்டுக்குள் அடங்கவில்லை. அங்கு கடல் நீர் பொங்கி எழுந்து கிழக்கு பகுதிகளில் வீடுகளை சேதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வைப்பின் பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

மேலும் வெளியத்தான் பரம்பு, எடவணக்காடு அண்ணியில் ஆகிய கடற்கரை பகுதிகளிலும் கடற் சீற்றம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. கடற்கரைச் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு உள்ளதால் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.