தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, ஜூலை 8-ம் தேதி நள்ளிரவு விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு காரில் வந்துள்ளார். அவரது ஆதரவாளர்கள் 4 கார்களில் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இரவு சுமார் 11:45 மணியளவில் திருச்சியை அடுத்த துவாக்குடி சுங்கச் சாவடியில், சசிகலா ஆதரவாளர்களின் 4 கார்களும் ஸ்கேன் செய்யப்பட்டு வெளியேறியிருக்கின்றன. சசிகலாவினுடைய கார் வந்தபோது, சுங்கச் சாவடியில் இருந்த ‘ஃபாஸ்ட் டேக்’ ஸ்கேன் கட்டை சசிகலா காரின் கண்ணாடி மீது விழுந்திருக்கிறது. இதில் சசிகலாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த சசிகலா ‘இதே மாதிரியான சம்பவம் இந்த சுங்கச் சாவடியில் எனக்கு 3 தடவை நடந்துருக்கு. என்னை பழிவாங்கணும்னு யாராவது சொல்லி, வேணும்னே இப்படி செய்றீங்களா!’ என தனது காரை ஓரமாக நிறுத்திவிட்டு, காரில் இருந்தபடியே தன்னுடைய ஆதரவாளர்களுடன் சுங்கச் சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டார். சுங்கச்சாவடி மேலாளர் அமர்நாத் ரெட்டி சம்பவ இடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்டும், சசிகலா தரப்பு போராட்டத்தைக் கைவிடவில்லை. அதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் துவாக்குடி இன்ஸ்பெக்டர் (பொ) பன்னீர்செல்வம் ஆகியோர் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘எழுத்துப் பூர்வமாக புகார் கொடுங்கள். நிச்சயமாக நடவடிக்கை எடுக்கிறோம்’ என போலீஸார் கேட்டுக் கொண்ட பிறகே, சசிகலா போராட்டத்தை முடித்துக்கொண்டு தஞ்சாவூருக்குக் கிளம்பினார்.
இந்நிலையில், நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக சசிகலா ஆதரவாளர்கள் 10 பேர்மீது, துவாக்குடி போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். சட்டவிரோதமாகக் கூடியது, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது, தகராறு செய்தது என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர். இது குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “டோல்கேட்ல ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் ஆகி ஒரு வண்டி போன பின்னாடி, நின்னு தான் அடுத்த வண்டி போகணும். ஆனா, முன்னாடி வண்டி போனதும் பின்னாடியே டக்குன்னு சசிகலா அவர்களோட கார் போயிடுச்சி. அதனால தான் கார் கண்ணாடியில் அந்த ஸ்கேன் கட்டை மோதியிருக்கு. மத்தபடி கார் கண்ணாடி எல்லாம் எதுவும் உடையலை. ஸ்கேன் கட்டை மோதுனதால வண்டியை பிரேக் அடிச்சதால, சசிகலா அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்ருக்கு அவ்ளோ தான். இப்போ வரை சசிகலா தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் கொடுக்கலை’ என்றனர்.