பெரும் அரசியல் பரபரப்புக்கு இடையே நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டம் நடைபெறும் வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிநவீன நுழைவு வாயில் பொறுத்தப்பட்டுள்ளது.
அதிமுகவில் கடந்த சில வாரங்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வருபம் எடுத்துள்ள நிலையில், கட்சியில் ஒற்றை தலைமை யார் என்பதில் ஒபிஎஸ் இபிஎஸ் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வெளியாக உள்ள நிலையில், கட்சி பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. சென்னை வானகரத்தில உள்ள தனியார் மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற தீர்ப்பு நாளை காலை 9 மணிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் மொத்தம் 16 அதிநவீன நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு ஆர்எஃப்ஐடி என்ற அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை கையில் இருந்தால் மட்டுமே பொதுக்குழுவுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆர்எஃப்ஐடி அடையாள அட்டையில், உறுப்பினரின் பெயர், வயது புகைப்படம் மற்றும் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தொடர்பான முழு விபரமும் இடம்பெற்றிருக்கும் என்றும், கடந்த 23-ந் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ ஆதரவாளர்களிடையே பெரிய மோதல் ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் போன்று அடைக்கப்பட்டள்ள 16 நுழைவு வாயிலில், 12 நுழைவு வாயில் வழியாக கட்சி பொதுக்குழு உறுப்பினர்களும், மீதமுள்ள 4 நுழைவு வாயில் வழியாக செயற்குழு உறுப்பினர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் ஆர்எஃப்ஐடி அடையாள அட்டையை ஸ்கேன் செய்தால் மட்டுமே கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“