சுனில் கவாஸ்கர் #AppExclusive

யார் செய்த புண்ணியமோ, நமக்கு ஒரு கவாஸ்கர் கிடைத்திருக்கிறார். இதற்கு முன் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எத்தனையோ ஆட்டக்காரர்கள் இருந்திருக்கிறார்கள். இன்னும் எத்தனையோ பேர் உருவாக இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் கவாஸ்கர் தனித்து நிற்கிறார். அவரோடு ஒப்பிடக் கூடிய வகையில் எந்தப் பெயரும் நம் நினைவிற்கு வருவதில்லை. 

தான் பெருமை சேர்த்துக் கொள்வதற்காக மட்டும் கவாஸ்கர் ஆடுவதில்லை. தாய்நாடு பெருமை இழந்துவிடக்கூடாது என்ற நினைப்பிலேயே விளையாடுகிறார். சக ஆட்டக்காரர்கள் எதிர்முனையில் வெளிநடப்புச் செய்துகொண்டே இருந்தாலும் இவர் மறு முனையில் தனி மரமாக நின்று நிழல் தந்து கொண்டிருப்பார். ‘பாட்’டுடன் மைதானத்தில் இருக்கும்போது இவர் கடைபிடிக்கும் பொறுமை, விடாமுயற்சி, ஈடுபாடு எல்லாமே இவருக்கு உடன் பிறப்புக்கள் மாதிரி.

இப்போது காப்டன் என்ற புதுப் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கவாஸ்கர் வெளிப்படையாகப் பேசுகிறார்.

விவாதத்துக்குரிய வகையில் எழுதுகிறார். பூசி மெழுகும் வியாபாரமே இவரிடம் கிடையாது. ‘ஸன்னி டேஸ்’ என்ற இவருடைய சுய சரிதம் புத்தகமாக வெளிவந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் நிறைய இடங்களில் கிரிக்கெட் நிர்வாகிகளைச் சாடியிருந்தார் அவர். அதைப் பற்றிக் கேட்டபோது, “நான் உண்மையைத்தான் கூறியிருக்கிறேன்.

ஒருவர் கிரிக்கெட்டில் ‘பெரிய புள்ளி’யாக இருக்கிறார் என்பதால் அவர் ஏதாவது தவறு செய்தால் கூட நான் சும்மா இருக்கவேண்டுமா?” என்றார் கவாஸ்கர்.

Sunil Gavaskar

“நான் ஒரு நல்ல ஃபீல்டராக இல்லையே” என்று வருத்தப்பட்டுக் கொள்கிறார் கவாஸ்கர். “பட்டெளடி, ஸோல்கர், வடேகர் மாதிரி ஃபீல்டு செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசைதான். ஆனால் முடியவில்லை. அந்தத் திறமை நம்மோடு பிறக்க வேண்டும் போலிருக்கிறது!” என்கிறார் இவர். இந்த சீசனில் கவாஸ்கர் ஒரு புது ‘பாட்’பயன்படுத்துகிறார். ‘Run Reaper’என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த ‘பாட்’ 2.8 கிலோ கிராம் எடை இருக்கும்! அதன் மேல்பக்கத்தில் பத்து துளைகளும் காணப்படும். ‘”நான் ஹூக்’ செய்யும்போதோ, “கட்’ செய்யும் போதோதான் பெரும்பாலும் அவுட் ஆகிறேன். ‘பாட்’ கனமாக இருந்தால் இது சாத்தியமில்லை’ என்கிறார் கவாஸ்கர். இந்த சீசனில் ரிஸ்ட் பேடும். கறுப்பு நிற ஹெல்மெட்டும் உபயோகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார் கவாஸ்கர். “கையிலோ, தலையிலோ அடிபட்டால் கிட்டத்தட்ட ஒரு வருடம் என்னைப் படுக்க வைத்துவிடும். கிரிக்கெட்டையே அதிகமாக நம்பியிருப்பதால் எந்தவித ரிஸ்க் எடுக்கவும் நான் தயாராக இல்லை. என்கிறார். வீட்டில் இருக்கும்போது கவாஸ்கர் படித்துக் கொண்டோ, சங்கீதம் கேட்டுக் கொண்டோதான் இருப்பார். கொஞ்ச மாகத்தான் சாப்பிடுகிறார், சிகரெட் புகைப்பதில்லை. குடிப்பழக்கமும் கிடையாது.

Sunil Gavaskar

‘கவாஸ்கர் பணத்தாசை பிடித்தவர்.”-இது அவர்மீது சுமத்தப்படும் ஒரு குற்றச்சாட்டு. இதற்கு அவர் தரும் விளக்கம்: ”நான் இன்னும் கொஞ்ச வருடங்களுக்குத்தான் விளையாட முடியும், அதற்குள் என் எதிர்காலத்தை நான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எனக்கும் பெற்றோர், மனைவி, மகன் என்று இருக்கிறார்களே!” சிறுவனாக இருந்தபோது கவாஸ்கருக்கு ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராக வேண்டும் என்ற ஆசையே இருந்ததில்லை.  “பள்ளி நாட்களில் நான் ஒரு டாக்டராக வேண்டும் என்றுதான் கனவு கண்டு கொண்டிருந்தேன். ஆனால் ஏழாவது வகுப்புக்குப் போவதற்குள் டாக்டருக்கு வேண்டிய அறிவு எனக்கு இல்லை என்பதைப்புரிந்துகொண்டேன்!’ என்றார் கவாஸ்கர். கவாஸ்கரின் மகன் ரோஹன் இடது கையால் கிரிக்கெட் ஆடுகிறான். “தாம்சன்’ என்ற பெயரைக் கேட்டாலே அவனுக்கு அதிக உற்சாகம் உண்டாகிறதாம். இத்தனைக்கும் தாம்சனை அவன் நேரில் பார்த்தது கிடையாது. பெயரைத் தான் கேள்விப்பட்டிருக்கிறான்! கவாஸ்கரின் மனைவி மார்ஷ்னில் கூறுகிறார்: ‘’என் கணவர் வீட்டிலேயே தங்குவதில்லை. தீபாவளி, கிறிஸ்துமஸ், புது வருடம் – இப்படி எந்தப்பண்டிகைக்குமே அவர் என்னுடன் இருப்பதில்லை. என் பிறந்த நாள் ஜனவரியில் வரும். அப்போது சுனில் சென்னை டெஸ்ட்டில் பொங்கல் கொண்டாடிக் கொண்டிருப்பார்! என் கணவர் மாட்ச் இல்லாத நேரங்களில் கிரிக்கெட் பற்றி சர்ச்சைக்குரிய புத்தகங்கள், கட்டுரைகள் எழுத ஆரம்பித்து விடுவார். பிறகு ‘கமிட்டி’ முன் ஆஜராகிக் கொண்டிருப்பார்! மீதி சமயத்தில் பாமாலிவ் கம்பெனியின் விளம்பரத்துக்கு “போஸ் கொடுத்துக் கொண்டிருப்பார்! இதெல்லாம் போக எப்போதாவது நேரம் கிடைத்தால் என் கணவர் ஆபீஸ்கூடப் போவார்!”  நன்றி: “ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட்’ 

Sunil Gavaskar

கிரிக்கெட்டே உன் விலை என்ன?

இந்தியகிரிக்கெட்காரர்கள் ‘பாக்கர்’(Packer) குழுவில் சேர்வார்களா? இப்போது இது ஒரு பெரிய கேள்விக்குறி.

சேர்ந்து விட்டால்? இந்தியக் குழு அநாதையாகிவிடும்.

பாக்கரிடம் சேர்ந்தால் வரவு செலவு கணக்கு எப்படி?

ஆட்டக்காரரின் திறமையைப் பொறுத்து தொகையை நிர்ணயம் செய்கிறார் பாக்கர். பாகிஸ்தானைச் சேர்ந்த இம்ரான்கானுக்கு மூன்று வருட ஒப்பந்தத்திற்கு ஆறு லட்ச ரூபாய் கிடைக்கிறது. காப்டன் முஷ்டாக் முகம்மதுக்கு ஒன்பது லட்ச ரூபாய். மேற்கிந்தியர்களான லாயிட், ரிச்சர்ட்ஸ் போன்றவர்களும், ஆஸ்திரேலியாவின் சாப்பல் சகோதரர்களும் கிட்டத்தட்ட பன்னிரண்டு லட்ச ரூபாயை மூன்று வருடங்களுக்குள் அறுவடை செய்கிறார்கள்! இந்தியர்களுக்கும் இந்தத் தொகை கிடைக்குமா? சந்தேகம்தான் என்கிறார் சண்டே நிருபர் ஹரேஷ் முன்வாணி.

பேடி அல்லது கவாஸ்கருக்கு நான்கு லட்ச ரூபாயும், கிர்மானிக்கு இரண்டரை லட்ச ரூபாயும்தான் கிடைக்கும் என்பது அவரது கணிப்பு. அப்படியே இந்திய ஆட்டக்காரர் ஒருவர் பாக்கரின் வலையில் சிக்கிவிட்டால் அவர் இந்தியாவுக்கு விளையாட உடனடியாகத் தடை விதிக்கப்படும். புதிய ஒப்பந்தத்தின்படி இந்திய போர்டு, ஆட்டக்காரர்களுக்காகச் சேமித்து வைக்கும் நிதியும் கிடையாது. இவை எல்லாவற்றையும் மீறி ஒருவர் பாக்கரிடம் போய்விட்டால் அவர் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய டாலரை எப்படி இந்தியாவுக்கு எடுத்து வருவார்? எக்கச்சக்க வரி கட்டியாக வேண்டுமே? அப்புறம் அவருக்கு என்ன மிஞ்சும்? இந்த நிலையில் கிர்மானி மட்டும் பாக்கரில் சேருவது தான் லாபகரமானது. காரணம் , அவருடைய பெற்றோர்.

பாகிஸ்தானுக்குக் குடியேறி விட்டார்கள். பாகிஸ்தானில் வரி விதி முறைகளில் அத்தனை கெடுபிடி கிடையாது.

– விகடன் டீம்

(03.12.1978 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.