சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் – 14

சுப. உதயகுமாரன்

[14] பரிந்துணர்வு கொள்வோம்

[] ஒரு பேருந்தில் நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும்போது, கைக்குழந்தையுடன் ஒரு பெண் ஏறினால், எழுந்து நின்று உங்கள் இருக்கையை அந்தப் பெண்ணுக்குத் தருவீர்களா? அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பீர்களா?

[] ஓர் அஞ்சல் அலுவலகத்துக்கு நீங்கள் போகும்போது, உங்களுக்கு முன்னால் வந்து வரிசையில் நிற்போர் தங்கள் வேலைகளை முடிக்கட்டும் என்று காத்திருப்பீர்களா? அல்லது முண்டியடித்து உங்கள் வேலையை முடித்துக்கொள்ளப் பார்ப்பீர்களா?

[] ஒரு நண்பர் ஏதோ ஒரு கொண்டாட்டத்திற்காக, உங்களை ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் செல்லும்போது, அவருக்கு அதிகம் செலவு வருத்தக்கூடாது என்று கவனமாகத் தேர்ந்தெடுப்பீர்களா, அல்லது விலை உயர்ந்த உணவு வகைகளை வாங்கி உண்பீர்களா?

[] நோயுற்று அவதிக்குள்ளாகி இருக்கும் ஒருவரை காணச் செல்லும்போது, அவருக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் நல்ல வார்த்தைகளை மட்டுமேப் பேசுவீர்களா, அல்லது அந்நோயின் சங்கடங்கள் பற்றியும், சாவைப் பற்றியும் பேசுவீர்களா?

[] தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, ஒரு துருப்பிடித்த கூர்மையான ஆணி கிடந்தால், அதை எடுத்து யாருக்கும் பாதகம் வராத இடத்தில் போட்டுச் செல்வீர்களா? அல்லது கண்டுகொள்ளாமல் கடந்து செல்வீர்களா?

மேற்படி கேள்விகளுக்கு நீங்கள் ஆம் என்று பதிலளித்தால், நீங்கள் பரிவுணர்வு மிக்கவர் என்று அர்த்தம். நீங்கள் அப்படியேத் தொடர வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. உங்களைப் போன்ற இளைஞர்கள்தான் இந்நாட்டுக்குத் தேவை.

அடுத்தவர்களின் தேவைகள் குறித்து மனங்கொள்வதுதான் பரிந்துணர்வு (Thoughtfulness). அது மூளையால் சிந்தித்து, லாபநட்டங்களைக் கணக்கிலெடுத்து, கவனமாகச் செய்யப்படும் ஓர் அரசியல் நடவடிக்கை அல்ல. “உடுக்கை இழந்தவன் கைபோல” தன்னிச்சையாகச் செய்யும் உணர்வார்ந்த செயல்பாடு.

நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியிருக்கும் பிறருக்கும் அழகான நேர்மறை உணர்வுகளை உருவாக்க வல்லது பரிந்துணர்வு. அது இரக்கவுணர்வினின்றும் வேறுபட்டது. இரக்கவுணர்வு என்பது ஒருவரிடம் கருணையோடு, மரியாதையோடு நடந்துகொள்வது. ஆனால் பரிந்துணர்வு என்பது பிறர் மனதில் ஓர் ஆழமான பிணைப்பை, தொடர்பை உருவாக்குகிறது. பிறரின் இடத்தில் உங்களை வைத்துப் பார்ப்பதும், அதன் மூலம் அர்த்தமுள்ள செயல்பாட்டிலும் ஈடுபடுவதால் இரக்கவுணர்வைவிட ஆழமானது பரிந்துணர்வு.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

பண்பட்ட, நாகரிகமான நடத்தையின் பின்னால் பெரும் சிந்தனையோ, கவனமோ இருக்க வேண்டியதில்லை. ஆனால் பரிந்துணர்வு கொண்டவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்கள்மீது சிறப்புக் கரிசனம் கொள்வதோடு, அச்சூழலைக் கருத்திற்கொண்டு, அதற்கேற்ப அன்போடும் அர்த்தத்தோடும் நடந்து கொள்கிறார்கள்.

மனங்கொள்வது (Mindfulness) என்பது ஒரு மனிதரை மேலோட்டமாக ஏற்றுக்கொண்டு உரிய எதிர்வினை ஆற்றுவது. ஆனால் பரிந்துணர்வு என்பது ஒருவரை ஆழமாகப் புரிந்துகொண்டு, அவர் முழுமையாக அங்கீகரிக்கப்படுவதை அவருக்கு உணர்த்தும் விதத்தில் நடந்துகொள்வது.

சில நேரங்களில் மவுனமாக இருப்பதுகூட பரிந்துணர்வை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. மேற்கத்திய கலாச்சாரத்தில் மவுனம்காப்பது என்பது ஒத்துழையாமை, தண்டனை என்றெல்லாம் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. அது ஒரு மந்தமான அணுகுமுறையாக, நேர விரயமாகவெல்லாம் பார்க்கப்படுகிறது. ஆனால் பல கலாச்சாரங்களில் மவுனம் ஒரு பலமாகவும், தலைமைத்துவத்துக்குத் தேவையான ஒரு குணாதிசயமாகவும் கருதப்படுகிறது.

பரிந்துணர்வு கொண்ட தலைவர் சராசரி தலைவரைவிட அதிகம் சிந்திக்கிறார். தன்னுடைய முடிவுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் போன்றவை தன்னைச் சுற்றியிருக்கும் மக்கள் மீது எழச்செய்யும் தாக்கங்கள் பற்றி கரிசனம் கொள்கிறார். பரிந்துணர்வு கொண்ட தலைவர் தன்னைப் பற்றி சிந்திப்பதைவிட பிறரைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார். மற்றவர்களின் தேவைகள் மற்றும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

ஸ்வீடன் நாட்டின் முன்னாள் பிரதமர் ஓலாஃப் பால்மே பெங்களூரில் படித்தவர். காந்தியத்தின்பால் ஈர்க்கப்பட்டவர். அவர் தன் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்று முக்கியமான முடிவுகள் எடுக்கும்போதெல்லாம், கண்களை மூடி தியானித்து, மகாத்மா காந்தி சொன்ன அறிவுரையைத் தவறாமல் பின்பற்றியதாகத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

காந்தியடிகள் சொன்ன அறிவுரை இதுதான்: “நான் உங்களுக்கு ஒரு சூத்திரம் தருகிறேன். உங்களுக்குச் சந்தேகம் எழும்போதெல்லாம், அல்லது உங்களின் அகங்காரம் அதிகமாகும்போதெல்லாம், கீழ்க்காணும் சோதனையை மேற்கொள்ளுங்கள். நீங்கள் சந்தித்திருக்கும் மிகவும் ஏழையான, பலவீனமான மனிதரின் முகத்தை நினைவுகூர்ந்துவிட்டு, நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை அவருக்கு உதவிகரமாக இருக்குமா என்று உங்களையேக் கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் நடவடிக்கையால் அவர் ஏதாவது பலன் பெறுவாரா? அவரது வாழ்வின் மீது, ஊழின் மீது அவருக்கு ஏதேனும் அதிகாரத்தை அது பெற்றுத் தருமா? வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பசித்திருப்போரையும், ஆன்மத்தவிப்பில் இருப்போரையும் விடுதலைக்கு இட்டுச் செல்லுமா என்று பாருங்கள். அப்போது உங்கள் சந்தேகங்களும், உங்கள் அகங்காரமும் உருகிப்போவதை உணர்வீர்கள்.”

இதுதான் பரிந்துணர்வின் உச்சம். இந்த பரிந்துணர்வை வளர்த்துக்கொள்வது எப்படி? முதலில், வேகத்தைக் குறையுங்கள்: பரிந்துணர்வு உங்களில் மிளிர அதற்குரிய நேரத்தையும், வெளியையும் நீங்கள் உங்களுக்குக் கொடுத்தாக வேண்டும். உங்களைச் சுற்றியிருப்போரின் தேவைகள் என்ன என்பதைக் கண்டுணர நீங்கள் ஒரு படி பின்னால் சென்று சுற்றுமுற்றும் அவதானிக்க வேண்டும். சிந்திப்பதற்கு நேரமும், வெளியும் இல்லாத நிலையில் நீங்கள் பரிந்துணர்வைப் பேண முடியாது. நீங்கள் மெதுவாகச் செல்லும்போதுதான், விடயங்களைப் பார்க்க முனைவீர்கள். அப்படிப் பார்க்கும்போது, பரிந்துணர்வு தானே வளரும்.

இரண்டாவது, பிறரை நேர்மறையாகவே மதிப்பிடப் பழகுவோம். அவரது தனிப்பட்ட வாழ்வில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, அவருடைய மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்று நமக்கு சரியாகத் தெரியாத நிலையில், அவரை எதிர்மறையாக மதிப்பிட வேண்டாம். நாம் செய்யும் செயல்களுக்கு காரண காரியங்கள் கற்பித்துக் கொள்ளும் நாம், மற்றவர்களை சந்தேகக்கண்ணோடுப் பார்க்கவே முனைகிறோம்.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

மூன்றாவது, நாமாகவே சில கணிப்புக்களை உருவாக்கிக்கொண்டு துரிதமாக முடிவுக்கு வருவதைத் தவிர்ப்போம். மேம்போக்காக விடயங்களைப் பார்க்காமல், ஆழமாக பார்க்கப் பழகுவோம். அப்படிப் பார்க்கும்போது, அவர்கள் எதோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் உண்மையானத் தேவைகள் என்ன என்றெல்லாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

நான்காவது, பிறருடைய நிலைமை பற்றிய உண்மையானப் புரிதலை உருவாக்கிக் கொள்வோம். அது உங்களைப் பிறருடன் நெருங்கவும், அவர்களுடையத் தேவைகள் குறித்து அறிந்துகொள்ளவும், நீங்கள் எப்படி உதவலாமென்று தெரிந்துகொள்ளவும் உதவும்.

ஐந்தாவது, மேற்படி அறிவின் அடிப்படையில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். என்னால் முடிந்ததைச் செய்துவிட்டேன் என்றில்லாமல், தொடர் கவனம் செலுத்துவோம். அப்படி தொடர் கவனம் செலுத்தும்போது, அவர்கள் உங்களின் கரிசனத்தை பெரிதும் மெச்சுவார்கள். உறவும் மேம்படும்.

பரிந்துணர்வின்மைக்கும், பரிந்துணர்வு கொண்டிருப்பதற்கும் ஒரே எடுத்துக்காட்டாக பெருந்தலைவர் காமராசர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு அமைகிறது. அவர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, மண்ணாங்கட்டி என்றொருவர் சட்டமன்ற விடுதியில் கடைநிலை ஊழியராக வேலைபார்த்தார்.

எப்போதும் மூக்கையாதேவர் அறையிலேயே இருந்த மண்ணாங்கட்டியின் தலையில் இடி விழுந்தது போல ஓர் அரசு உத்தரவு வெளியாயிற்று. அதாவது எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் யாரும் அரசு வேலைகளில் தொடர முடியாது என்றது அந்த அறிவிப்பு. அவ்வுத்தரவால் தான் வேலையிழப்பதாகவும், தன் குடும்பம் தெருவுக்கு வந்துவிட்டதாகவும் மூக்கையாதேவர் அவர்களிடம் சொல்லி அழுது புரண்டார் மண்ணாங்கட்டி.

அவரை ஆற்றுப்படுத்துவதற்கு ஏதாவது சொல்ல வேண்டுமே என்கிற எண்ணத்தோடு, மூக்கையாதேவர் “முதல்வர் அலுவலகத்துக்கு போன் போடு” என்று பணித்தார். ஆபரேட்டர் வழியாகவே தொடர்புகள் பெற்று பேசும் காலக்கட்டம் என்றாலும், மண்ணாங்கட்டி போன் போட்டதும், முதல்வரோடு நேரடித் தொடர்பு கிடைத்துவிட்டது. முதல்வர் எடுத்து, “யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார்.

“நான் சட்டமன்ற விடுதி பியூன் பேசுகிறேன்” என்றபடியே மண்ணாங்கட்டி மூக்கையாதேவரைப் பார்த்தார். அவரோ முதல்வர் அலுவலகத்தில் உதவியாளர் ஒருவர் போனை எடுத்திருப்பார் என்ற நினைப்புடன், “எழுதப்படிக்கத் தெரியாதவர் முதல்வராக இருக்கும்போது, நான் பியூனாக இருக்கக் கூடாதா என்று கேள்” என்று சொன்னார். மண்ணாங்கட்டியும் அதை அப்படியே ஒப்பிக்க, போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அடுத்த அரைமணி நேரத்தில் மூன்று அதிகாரிகள் அங்கே வந்து மண்ணாங்கட்டியைத் தேடினார்கள். முதல்வர் கையோடு அழைத்துவரச் சொன்னதாக அவர்கள் தெரிவித்தனர். அரண்டு மிரண்டுபோன மண்ணாங்கட்டி வேறு வழியின்றி அவர்களோடுச் சென்றார். முதல்வரின் அறையிலிருந்த ஒரு சோபாவில், கன்னத்தில் கைவைத்தபடியே கவலை தோய்ந்த முகத்துடன் முதல்வர் உட்கார்ந்திருந்தார். நால்வரும் உள்ளே நுழைந்ததும், முதல்வர், “நீங்கள்தான் மண்ணாங்கட்டியா?” என்று கேட்டார்.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

“ஆமாம் ஐயா, என்னை மன்னித்துவிடுங்கள்” என்று மண்ணாங்கட்டி அழுது புரள, அவரை தன்னருகே சோபாவில் உட்காரச் சொன்னார் முதல்வர். அவரது முதுகில் தட்டிக்கொடுத்தவாறே, கையெடுத்துக் கும்பிட்டு, “நான் தவறு செய்துவிட்டேன். அந்தத் தவறை நீங்கள்தான் புரியவைத்தீர்கள். மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டவாறே, “இரண்டு நாட்களாக உங்கள் வீட்டில் சமைக்கவில்லையாமே? உங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளாமே? எல்லாவற்றையும் இப்போதுதான் தெரிந்துகொண்டேன். இனிமேல் புதிதாக வேலைக்கு வருகிறவர்களுக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டுமென்று நான் உத்தரவுப் போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறு” என்றார் முதல்வர்.

மண்ணாங்கட்டி கதறி அழ, பேச்சின்றி நின்றார் பெருந்தலைவர். அங்கேயே அப்போதே அவருடைய வேலைக்கான உத்தரவைத் தயாரித்து, முதல்வர் கையெழுத்திட்டார். “அவரை அழைத்துக்கொண்டு போங்கள். கவலைப்பட வேண்டாமென்று அவருடைய மனைவி, குழந்தைகளிடம் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்ட முதல்வர், ”போகும்போது எல்லோருக்கும் ஓட்டலில் சாப்பாடு வாங்கிக்கொண்டு போங்கள். இரண்டு நாட்களாக அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டார்கள்” என்றார்.

பரிந்துணர்வு கொண்டவர்கள்தான் இவ்வுலகை மேம்பட்ட இடமாக மாற்றுகிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராய் இருங்கள்.

(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: [email protected]).

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.