சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று நடைபெற்ற தீவிர தூய்மை பணியின் மூலம் 156.95 மெட்ரிக் டன் திடக்கழிவுகளும், 452.39 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் நகர்புறங்களில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் (Cleanliness drive) நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் ”தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஜூலை மாதத்தின் 2வது சனிக்கிழமையான நேற்று சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளிலும் தீவிர தூய்மைப் பணி பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது. மேயர் பிரியா மணலி மண்டலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு “நமது குப்பை. நமது பொறுப்பு” என்ற விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி, பொதுமக்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த தூய்மை பணியில் 283 பேருந்து நிறுத்தங்களில் 3.37 மெட்ரிக் டன் உலர் கழிவுகள், 128 பூங்காக்களில் 14.86 மெட்ரிக் டன் உலர் கழிவுகள், 75 வழிபாட்டு தலங்களில் 4.63 மெட்ரிக் டன் உலர் கழிவுகள், 37 ரயில்வே நிலையங்களின் புறப்பகுதிகளில் 6.48 மெட்ரிக் டன் உலர் கழிவுகள், 54 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளில் 7.88 மெட்ரிக் டன் உலர் கழிவுகள், மாநகராட்சி மயான பூமிகள் அமைந்துள்ள 53 இடங்களில் 19.67 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் மற்றும் இதர 28 இடங்களில் சுமார் 48.04 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் என மொத்தம் 104.93 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இதேபோன்று கட்டிடக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ள 63 இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் இருந்து 452.39 மெட்ரிக் டன் கட்டிடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மருத்துவமனை மற்றும் இதர மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் 78 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தூய்மை பணியில் 52.02 மெட்ரிக் டன் அளவிலான திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 19,082 குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று 82,411 நபர்களை சந்தித்து குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.