சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் தலைமைச் செயலாளர் திடீர் ஆய்வு

சென்னை: சோழிங்கநல்லூர் ஆவின் பால்பண்ணையில் தலைமைச் செயலாளர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு பல அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சென்னையில் அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பால் மற்றும் பால் உபபொருட்கள் பால் பண்ணைகளை இயக்கி வருகிறது. இதில் சோழிங்நல்லூர் பால் பண்ணையில் இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பால் பண்ணையின் உற்பத்தி, குளிரூட்டும் பிரிவு, தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் பொறியியல் பிரிவுகளின் பணிகளை ஆய்வு செய்தார்.

மேலும் பால் ஏற்றி வரப்பட்ட டேங்கர் லாரிகளில் பாலின் தரம் பரிசோதனை செய்யப்படுவது குறித்தும் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் தலைமை செயலாளர் வழங்கிய அறிவுறுத்தல்களின் முழு விவரம்:

சூரிய மின் உற்பத்தியை பயன்படுத்துவதை அதிகப்படுத்தி மின்சார செலவினங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்தி, உற்பத்தி செலவினங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாலகங்களில் குழந்தைகள் விரும்பும் பால் பொருட்களை முன் பகுதியில் காட்சிப்படுத்தி விற்பனையை அதிகப்படுத்த வேண்டும்.

பாலகங்களில் விலைப்பட்டியலை நுழைவு வாயில் அருகே வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வண்ணம் பெரிதாகவும் பால் பொருட்களின் படங்களுடன் காட்சிப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் பணிக்குழு அமைத்து நிறுவனத்தின் மேம்பாட்டிற்கான மற்றும் விற்பனையை அதிகப்படுத்துவதற்கான சிறந்த ஆலோசனைகள் கூறும் அலுவலர்களுக்கு அதற்கான பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் அளித்து ஊக்கப்படுத்த வேண்டும்.

ஆவின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டங்களை அவ்வப்போது நடத்தி அவர்களிடையே நிறுவனத்தின் பொருட்கள் பற்றியும் மற்றும் முன்னேற்றத்திற்கான விவரங்களை பற்றியும் கலந்துரையாடப்பட வேண்டும்.

உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.