ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும ;புதன்கிழமை தமது பதவியில் இருந்து விலகுவதாக தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதனால், தொடரந்தும் நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைதியான முறையில் நிர்வாகத்தை கையளிப்பதற்குத் தேவையான நிலையை உருவாக்குமாறும் சபாநாயகர் அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (09) இடம்பெற்ற கட்சித் தலைவர்களது கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் தாம் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.
தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் வெளியிட்ட ஜனாதிபதி, அமைதியான முறையில் நிர்வாகத்தைக் கையளிக்க வேண்டும் என்பதற்காக எதிர்வரும் (13) புதன்கிழமை ஜனாதிபதிப் பதவியில் இருந்து தாம் விலகுவதாக மக்களுக்கு அறிவிக்குமாறு தம்மிடம் குறிப்பிட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
சிலர் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படுகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டும் எனவும் சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடவடிக்கையினை உரிய முறையில் மேற்கொண்டு நாட்டின் நாளாந்த நடவடிக்கைகளை இயல்பான முறையில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சகல அரச சேவையாளர்கள் மற்றும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் பதவியில் இருந்து விலகி, சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆட்சி அதிகாரத்தை கையளிக்க தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.