புதுடெல்லி: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மிகவும் நெருக்கமான எம்எல்ஏ பங்கஜ் மிஸ்ரா. இவர் மீது டோல்வரி ஒப்பந்தகாரர் ஒருவர் ஷாகிப்கன்ஜ் காவல் நிலையத்தில் 2020-ம் ஆண்டு புகார் கொடுத்திருந்தார். அதில், டோல்கேட் டெண்டரில் அமைச்சர் ஒருவரின் சகோதரர் போட்டியிட்டு போலி நிறுவனம் ஒன்றின் பெயரில் மிக அதிகமான தொகைக்கு ஏலம் கேட்டு, பின் அதை செலுத்தவில்லை என்றும், இச்சம்பவம் தொடர்பாக பங்கஜ் மிஸ்ரா மற்றும் அமைச்சரின் உத்தரவின் பேரில் மோதல் நடந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் பங்கஜ் மிஸ்ரா மீது புதிய நிதி மோசடி வழக்கு பதிவு செய்து ஜார்கண்ட்டின் சாகிப்கன்ஜ், பர்ஜெட் மற்றும் ராஜ்மஹல் உட்பட 17 இடங்களில் சோதனை நடத்தினர். சுரங்க குத்தகை ஒன்றை தனக்கு ஒதுக்கீடு செய்து கொண்டதாகவும், தனது மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததாகவும் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நெருக்கமானவரின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.