லக்னோ: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல்காரர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும் என பஜ்ரங் தள் என்ற தனது இளைஞர் அணியை விஎச்பி கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் ஜிகாதி அமைப்புகளிடமிருந்து இந்துக்களை பாதுகாக்க நாட்டின் 20 பகுதிகளை சேர்ந்த பஜ்ரங் தள் தொண்டர்களின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்காக நாடு முழுவதும் 44 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம் மாநிலம், மேற்கு உ.பி. கான்பூர், காசி, கோரக்பூர் மற்றும் அவாத் என 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், டெல்லி, கர்நாடகா, பிஹார், ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து விஎச்பி தேசிய செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் கூறுகையில், ‘‘இந்துக்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், சட்டப்படியும், ஜனநாயக விதிமுறைகள் படியும், பஜ்ரங் தள தொண்டர்கள் உதவி செய்வர். மதரீதியான பிரச்சினை ஏற்பட்டால், பஜ்ரங் தள தொண்டர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பர்’’ என்றார்.