மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுக்கூடும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.