சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 10) ஆண்கள் 1,418 பெண்கள் 1,119 என மொத்தம் 2,537 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 804 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து ,44,682 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,560 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 18,819 ஆக உள்ளது.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,722 ஆகவும், சென்னையில் 939 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு இன்று சற்றே குறைந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.
17 லட்சம் பேருக்கு தடுப்பூசி: தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் 31-வது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31வது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் 1.45 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன்படி இன்று (10.7.2022) மாலை 7 மணி வரை தமிழகத்தில் 17 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதில் 3.44 லட்சம் பேர் முதல் தவணையும், 10.56 லட்சம் பேர் 2வது தவணையும், 3 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர்.