தஞ்சாவூர் மாநகராட்சி முனிசிபல் காலனியில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை நேரில் பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தாவது,
“தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3471 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
முதல் தவணை தடுப்பூசி 93.10 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 87.10 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 12 முதல் 14 வயது உட்பட்டவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. 95 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீதமுள்ள 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 21,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுவரை 11,43,23,144 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 40 சதவீதத்திற்கும் மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் மட்டுமே கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது ஊரடங்கு போட வாய்ப்பு இல்லை” என்று அமைச்சர் தெரிவித்தார்.