திருவள்ளுவர் உருவத்தில் நெல் நடவு செய்து அசத்திய கும்பகோணம் விவசாயி இளங்கோவன்!

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், கும்பகோணம் அருகே விவசாயி இளங்கோவன் என்பவர் தனது வயலில் திருவள்ளுவர் உருவத்தில் நெல் நடவு செய்து அசத்தியுள்ளார்
கும்பகோணம் வட்டம், மலையப்பநல்லூரில் உலகின் முதன்முதலாக இயற்கை விவசாயம் பாரம்பரிய நெல்லுக்கு மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வயல் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் உழவுக்கென்று தனி அதிகாரம் கொடுத்து உழவு தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரின் உருவ நடவு வயலை இயற்கை விவசாயி இளங்கோவன் என்பவர் உருவாக்கி உள்ளார்.
நேபாளில் உள்ள சின்னார் என்ற நெல் ரகத்தினாலும், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்தினாலும், நீளம் 50 அடியும், அகலம் 45 அடியும் கொண்ட திருவள்ளுவரின் உருவ அமைப்பில் நடவு செய்துள்ளார். கழுகு பார்வையில் பார்க்கும்போது திருவள்ளுவர் அமர்ந்திருக்கும் நிலையிலான முழு உருவத்தை காட்டுகிறது என்பது இதன் சிறப்பம்சம்.
image
இது குறித்து இயற்கை விவசாயி இளங்கோவன், “நான் இயற்கை விவசாயத்தை கடந்த 10 வருடங்களாக செய்து வருகிறேன். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக தொடர்ந்து செய்து வந்தேன். அதுபோல இந்த வருடம் 2000 வருடங்களுக்கு முன்பு திருவள்ளுவர், அவர் இயற்றிய மொத்தக் குறள்களில் 11 குறள்கள் இயற்கை விவசாயம் பற்றி எழுதி உள்ளார். அதன் தாக்கமாக அதே இயற்கை விவசாயத்தை நாங்களும் செய்கிறோம் என்ற மகிழ்ச்சியில், திருவள்ளுவரின் உருவத்தை வயலில் நட கடந்த வருடம் முதல் திட்டமிட்டேன். அதனை இந்த வருடம் நிறைவேற்றியுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி. இதனை கடந்த ஐந்து நாட்களாக நான் தனி ஆளாக நட்டுள்ளேன். இதனைத்தொடர்ந்து எனது அடுத்த முயற்சியாக நம்மாழ்வார்,நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை வயலில் காட்டும் விதத்தில் தொடர உள்ளேன்” என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.