நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத துப்பாக்கி மற்றும் தோட்டாக்களின் புழக்கம் அதிகரித்திருக்கிறது. இது குறித்து நமது ஜூனியர் விகடனில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறோம். இந்த நிலையில், சட்டவிரோத துப்பாக்கிப் புழக்கத்தை கண்டறியும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பந்தலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அந்தத் தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு துப்பாக்கி (air gun) மற்றும் துப்பாக்கிளை ஆல்ட்ரேஷன் செய்யப் பயன்படுத்தப்படும் கருவிகளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்து வந்த நபர் குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், “கண்ணம்பள்ளியைச் சேர்ந்த சோமனுக்கு துப்பாக்கி தயாரிப்பது குடிசைத் தொழில் மாதிரி. 2014- ல் துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்த இவர்மீது குண்டர் சட்டம் போடப்பட்டு சிறையில் அடைத்தார்கள். வெளியில் வந்து மறுபடியும் அதே வேலையைச் செய்து கொண்டிருந்தார்.
கேரள வனத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிய தமிழ்நாடு போலீஸ் ஒருவருக்கு துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்த வழக்கில் கேரள காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார். ஜாமீனில் இருக்கும் காலத்திலும் அவரது குடிசைத் தொழிலான துப்பாக்கி தயாரித்தலை வீட்டுக்குப் பின்புறம் உள்ள பட்டறையில் செய்துவந்திருக்கிறார். எஸ்கேப் ஆன இந்த பலே ஆசாமியைத் தேடி வருகிறோம்” என்றார்.