ஐதராபாத்,
தெலுங்கானாவில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.தலைநகர் ஐதராபாத் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதைப்போல நல்கொண்டா, பத்ராத்ரி கொதகுடம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அவை வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பல நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக முக்கியமான ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி செல்கிறது. இதனால் கரையோர பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தவிக்கும் அவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். நல்கொண்டா மாவட்டத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இதைப்போல பத்ராத்ரி கொதகுடம் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். தலைநகர் ஐதராபாத்தில் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளது. இதைப்போல பல்வேறு மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகள் துண்டிக்கப்பட்டு தீவுகளாக மாறியிருக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.