Madurai Metro rail project feasibility check by Chennai officials: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மதுரையில் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்படும் என தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்தது. இந்நிலையில் மார்ச் பட்ஜெட் கூட்டத்தில் மதுரை மெட்ரோ ரயில் குறித்த அறிக்கை தயாரிப்பு பணி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: சசிகலாவால் நள்ளிரவில் அலறிய மைக்குகள்; பரபரப்பான காவலர்கள்
இந்தநிலையில், நேற்று அதற்கான முதற்கட்ட ஆய்வு நடந்தது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தலைமையில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மெட்ரோ ரயில்வே செயல்பாடு மற்றும் இயக்குனர்கள், மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய் அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.
மதுரை எய்ம்ஸ் உள்ள அமைய தோப்பூர் பகுதியில் இருந்து ஒத்தக்கடை வேளாண் கல்லுாரி வரை 35 கி.மீ., தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தோப்பூர், திருப்பரங்குன்றம், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், புதுார், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உயர்நீதிமன்ற கிளை, வேளாண் கல்லுாரி ஆகிய பகுதிகளை இணைத்து வழித்தடம் அமைப்பது குறித்து ஆலோசனை நடந்தது.
இந்த ஆய்வின் அடிப்படையில் மெட்ரோ ரயில் சேவைக்கான நோக்கங்கள், மக்களுக்கான போக்குவரத்து பயன்பாடு, நிலத்தேவை உள்ளிட்ட விபரங்களுடன் கூடிய சாத்தியக்கூறு அறிக்கை முதலில் தயார் செய்யப்படும். பின்னர், திட்டத்துக்கான நிதித்தேவை, வழித்தட அமைப்பு, நிலைய எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.