பணி நேரத்தில் நீண்ட நேரம் ஆப்சென்ட் ஆன அரசு மருத்துவர்.. நூற்றுக்கணக்கான நோயாளிகள் அவதி!

ஆரணி அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவரொருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இல்லாத காரணத்தினால் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்த அவலம் நிகழ்ந்துள்ளது.
ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற நோயாளிகள் சிலர், அங்கு நீண்ட நேரம் மருத்துவர் வராத காரணத்தினால் பெரும் அவதிக்குள்ளானர்கள். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் மம்தா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
image
இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை, ஆரணி அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு காலை வரையில் மட்டும் தான் சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அப்படி இன்றும் காலை சிகிச்சை சம்மந்தமாக நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய சீட்டு வழங்கபட்டது. ஆனால் காலையில் மருத்துவர் பாலகணேசன் என்பவர் பணி நேரத்தில் நீண்ட நேரம் ஆகியும் தனது இருக்கையில் வராத காரணத்தினால் நோயாளிகள் மற்றும் பொது மக்கள் பெரும் அவதிகுள்ளானர்கள்.
ஆரணியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மருத்துவர் தனது இருக்கையில் இல்லாத காரணத்தினால் நீண்ட வரிசையில் கால் வலிக்க நீண்ட நேரம் நின்று கொண்டு காத்திருந்ததால் நோயாளிகள் மேலும் சோர்வடைந்து காணப்பட்டனர். மேலும் ஓரு சில நோயாளிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து மருத்துவ அலுவலரிடம் நோயாளிகள் பொது மக்கள் புகார் அளித்தனர்.
image
ஆனாலும் மருத்துவர் இருக்கைக்கு யாரும் வரவில்லை. ஆகையால் சம்மந்தபட்ட மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நோயாளிகளை அலைகழிக்காமல் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அரசு மருத்துவ அலுவலர் மம்தா கூறியதாவது, `இன்று ஞாயிற்று கிழமை என்பதால் புறநோயாளிகளை காலை 10.30 மணி வரையில்தான் கவனிப்பது வழக்கம். இன்று காலை 10.30 மணிக்கு மேல் இரு குழுவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அந்த நேரத்தில் காலை 10.30மணி வரையில் புற நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் உள்ளே சென்று உள் நோயாளிகளை கவனித்து வந்தார்” என தெரிவித்தார்.
image
மேலும் `மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு புற நோயாளிகளுக்கு சீட்டு வழங்குதல் உள்பட சிகிச்சைக்குரிய பணிகள் அனைத்தையும் செய்ய வேண்டியுள்ளது. அதனால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி இன்று மூன்று மருத்துவர்கள் மருத்துவமனையில் பணியில் இருந்து வருகிறார்கள்’ என்று மருத்துவ அலுவலர் மம்தா தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.