'பாகுபலி' வந்து இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவு
ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்க, தமிழ், தெலுங்கில் தயாரிக்கப்பட்டு 2015ம் ஆண்டு ஜுலை 10ம் தேதி 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. இன்றுடன் படம் வெளிவந்து ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தமிழ், தெலுங்கில் இதற்கு முன்பு வெளிவந்த சில சரித்திரக் கதைகளின் சாயலில் படம் இருந்தது என்று விமர்சனம் அப்போது இருந்தாலும் பலரையும் வியக்க வைத்தது பிரம்மாண்டம். பிரம்மாண்டமான அரங்கம், போர்க்களக் காட்சிகள், எண்ணற்ற துணை நடிகர்கள் என படத்தை பெரிய அளவில் பேச வைத்தார்கள். சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்த முதல் பாகம் 600 கோடி வரை வசூலித்தது.
படத்தில் நடித்த பிரபாஸ், இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். 500 கோடி வசூலைக் கடந்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றது. தென்னிந்தியப் படங்கள் மீதான பார்வையை இந்தப் படம் முற்றிலும் மாற்றியது.
2015ல் வெளிவந்த முதல் பாகத்தின் தொடர்ச்சியாக 2017ல் வெளிவந்த இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விடவும் மூன்று மடங்கு வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்திற்குக் கிடைத்த பெயரும், புகழும்தான் இரண்டாம் பாகம் அந்த அளவிற்கு வசூல் செய்யவும் காரணமாக அமைந்தது.