தேனி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசி வந்த கேரளாவை சேர்ந்த இரண்டு வாலிபர்களை தேனி நகர போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சீனத் தயாரிப்பு மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வெளிநாட்டு அழைப்புகள் மூலம் பணம் சம்பாதித்தனரா அல்லது தீவிரவாதிகள் உள்ளிட்ட சட்டவிரோத அமைப்புகளுக்கு உதவினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேனியில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இளநிலை தொலை தொடர்பு அலுவலர் முனியாண்டி என்பவர் தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்ட விரோதமாக பயன்படுத்தி சிலர் வெளிநாடுகளுக்கு பேசி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் தேனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.
இந்த வழக்கில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 40 வயது நிரம்பிய சஜீர் மற்றும் 27 வயது நிரம்பிய முகமது ஆசிப் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் தேனி மாவட்டத்திற்கு வந்து அல்லிநகரம் மற்றும் ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். பி.எஸ்.என்.எல் அலைக்கற்றையை திருடி சட்டவிரோதமாக அவர்கள் வைத்திருக்கும் சீனத் தயாரிப்பு இயந்திரங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு பேசியுள்ளனர். இந்த இயந்திரங்கள் மூலம் சாதாரண இணையதள அழைப்புகளை பிஎஸ்என்எல் அலைபேசியின் மூலம் சாதாரண அழைப்புகளாக மாற்றி அனுப்பும் திறன் கொண்டவையாக இருந்துள்ளன.
அவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 36 சீன தயாரிப்பு மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ஒரு இயந்திரம் 150 சிம் கார்டுகள் இயக்க முடியும் என்றும் தினசரி ஒரு மிஷினில் உள்ள ஒரு சிம் கார்டு மூலம் மூலம் 300க்கும் மேற்பட்ட அழைப்புகள் வெளிநாட்டுக்கு சென்றிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் மூலம் செல்லும் அழைப்புகள் எங்கிருந்து சென்றது என்று கண்டுபிடிக்க முடியாத வசதியும் அந்த இயந்திரத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த இணைப்பு மூலம் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு நாடுகளுக்கு பேசி வந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து மேல் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு இத்தனை அழைப்புகள் பேசியது எதனால்? யாரிடம் பேசினார்கள்? வெளிநாட்டு அழைப்புகள் மூலம் பேசியவர்களிடம் பணம் வசூல் செய்து சம்பாதித்து பிஎஸ்என்எல்க்கு இழப்பை ஏற்படுத்தினார்களா? அல்லது போலீசாரிடம் சிக்கிய இருவரும் தீவிரவாத செயலில் ஈடுபடுவதற்காகவா? தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவருக்கு உதவவா? அல்லது சட்ட விரோதமான அமைப்புகளுடன் இணைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்காகவா? என்ற கோணங்களிலும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM